குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அவசர நிலைக் காலம் சுதந்திரத்திற்குப் பிந்தைய மோசமான இருண்ட காலம் - குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
Posted On:
10 AUG 2024 5:56PM by PIB Chennai
இந்திய வரலாற்றில் ஒரு வேதனையான அத்தியாயமாக 1975 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை அமைந்தது என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் இன்று (10-08-2024) கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அவசரநிலை நீடிக்கும் வரை உரிமைகள் தொடர்பாக யாரும் எந்த நீதிமன்றத்தையும் நாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்று அவர் குறிப்பிட்டார். சுதந்திரம் ஒரு தனிநபரால் பிடுங்கப்பட்டது எனவும், எந்த தவறும் செய்யாமல் பலர் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் மேலும் கூறினார். நீதித் துறை அப்போது அடிபணிந்ததாக அவர் தெரிவித்தார். நீதித்துறை அடிபணியாமல் இருந்திருந்தால், அவசர நிலை தொல்லைகள் இருந்திருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
ஜூன் மாதம் 25ஆம் தேதியை "அரசியல் சாசன படுகொலை தினம்" என்று அனுசரிப்பதற்காக அரசைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு தனிநபரால் பொறுப்பற்ற முறையில் காலில் போட்டு மிதிக்கப்பட்ட நாளை இது நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
நாட்டை உள்ளிருந்தே பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தீங்கு விளைவிக்கும் செயல் திட்டங்களை இப்போது சிலர் வைத்துள்ளனர் என்று அவர் கூறினார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று அமைப்புகளிலும் இத்தகைய சக்திகள் ஊடுருவக்கூடும் என்றும், அவற்றின் உண்மையான நோக்கங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் எச்சரித்தார். அண்டை நாட்டில் நடந்தது விரைவில் இந்தியாவில் நடக்கக்கூடும் என்று சிலர் கூறுவது குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இதுபோன்ற கருத்துகள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் வலிமையையும் ஒருமைப்பாட்டையும் பராமரிப்பதில் ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நாடாளுமன்றம்/சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றின் தவிர்க்க முடியாத பங்கை எடுத்துரைத்தார்.
தேச விரோத சக்திகள் நமது ஜனநாயகத்தை தடம்புரளச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறிய அவர், எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். இத்தகைய தீய நோக்கங்களிலிருந்து நமது அமைப்புகளைப் பாதுகாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு ஏ.ஜி.மாஸிஹ், திரு திரு சந்தீப் மேத்தா, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு அருண் பன்சாலி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான் மாநில சட்ட அமைச்சர் திரு ஜோகா ராம் படேல் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
****
PLM/DL
(Release ID: 2044153)
Visitor Counter : 42