சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போக்குவரத்து திட்டமிடல்

Posted On: 07 AUG 2024 1:06PM by PIB Chennai

நகர்ப்புற திட்டமிடல் என்பது மாநில அதிகாரத்திற்குட்பட்டது  பாடமாகும். அதன்படி, பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான போக்குவரத்து வரைபடம் மற்றும் மாதிரிகள் முக்கியமாக அந்தந்த மாநில அரசுகள்,  யூனியன் பிரதேசங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால்  செய்யப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக போக்குவரத்து வரைபடம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்கான நீடித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கை 2006, மெட்ரோ கொள்கை 2017 மற்றும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சிக் கொள்கை போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும், மேம்பட்ட போக்குவரத்து தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகளுக்கான மையத்தை அமைப்பதற்காக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்  தனது பயிற்சி நிறுவனமான இந்தியன் ஹைவே இன்ஜினியர்ஸ் அகாடமி மூலம் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தை  ஈடுபடுத்தியுள்ளது. இதன்படி நாக்பூர் மற்றும் மீரட் ஆகிய 2 நகரங்களில், நெரிசல் பகுதிகளை வரைபடமாக்க இந்திய பிரத்யேக நகர்ப்புற பரவலான தரவு மாதிரி உருவாக்கப்படும்.

மேலும், மாநில அரசின் குறிப்பான வேண்டுகோளின் பேரில், இந்திய நெடுஞ்சாலை பொறியாளர் கழகம், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், போக்குவரத்து வரைபடம் மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாதிரிகளை இறுதி செய்வதில், தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்துகிறது. இந்திய நெடுஞ்சாலை பொறியாளர் கழகம் அத்தகைய நிபுணத்துவத்தை தில்லி மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு அதன் ஆறு நகரங்களுக்கு (மும்பை, புனே, நவி மும்பை, சத்ரபதி சம்பாஜி நகர், நாசிக் மற்றும் தானே) அந்தந்த மாநில அரசுகளின் செலவில் வழங்கியுள்ளது.

நகர நெரிசலைக் குறைக்கவும், நகர்ப்புற பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும், 34 கிலோமீட்டர் தில்லி – மீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு உட்பட, 21 வெவ்வேறு நகரங்களில் செயல்பாட்டில் உள்ள சுமார் 945 கிலோமீட்டர் நீள மெட்ரோ ரயில் பாதைகளை மேம்படுத்துவதில் அரசு பங்களித்துள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு நகரங்களில், சுமார் 939 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சமீபத்தில், நகர்ப்புறங்களில் பேருந்து சேவைகளை அதிகரிக்க, 10,000 மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023   ஆகஸ்ட் 16 அன்று 'PM-eBus சேவா'  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதால், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பொதுவாக தேசிய தலைநகரப் பகுதியில் போக்குவரத்து ஆய்வை மேற்கொள்வதில்லை. எனினும், தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள சாலைகளில், நெடுஞ்சாலைத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலம், சாலைகளில் நெரிசலைக் குறைப்பதில் அரசு குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளது

நெடுஞ்சாலைத் திட்டங்களுடன் கூடுதலாக, 393 கி.மீ. நெட்வொர்க்கில் நாளொன்றுக்கு சராசரியாக 70,000 பயணிகள் பயணிக்கும் மெட்ரோ ரயில் சேவைகளை அரசு உருவாக்கியுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக சுமார் 86 கிலோமீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் கட்டுமானத்தில் உள்ளன. இது நிறைவடையும் போது, தில்லியின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில்  வசதியான மற்றும் மலிவான பொதுப் போக்குவரத்து அமைப்பை மேலும் மேம்படுத்தும்.

கனரக தொழில்கள் அமைச்சகத்தின் மின்சார வாகனங்களை விரைவாகப் பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்தல் திட்டத்தின் கீழ், 1221 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக, தில்லி அரசுக்கு மத்திய அரசின் நிதியுதவியையும் அரசு அனுமதித்துள்ளது. இது தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும், இது நெரிசலைக் குறைப்பது மட்டுமல்லாமல், மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

----

(Release ID 2042500)

MM/KPG/KR


(Release ID: 2042671) Visitor Counter : 62


Read this release in: English , Urdu , Hindi