மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தெரு நாய்களின் எண்ணிக்கையை அறிவியல் ரீதியாக கட்டுப்படுத்துதல்
Posted On:
06 AUG 2024 5:18PM by PIB Chennai
மத்திய அரசு, சமீபத்தில் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு (நாய்) விதிகள், 2001 ஐ மாற்றியமைத்து, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 இன் கீழ், ஜி.எஸ்.ஆர் 193 (இ) மூலம் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் 2023 ஐ அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி நாய்கள் மூலமாக ஏற்படும் ரேபிஸ் காரணமாக உலகளவில் மனித இறப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 59,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஆண்டுதோறும் 20,565 (35%) இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த மதிப்பீடுகள் 2004-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலானதாகும். நாட்டில் வெறிநாய்க்கடி நோயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு தவிர அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 12 வது ஐந்தாண்டு திட்டகாலம் முதல், தேசிய வெறிநாய்க்கடி கட்டுப்பாட்டு திட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் "தேசிய சுகாதார இயக்கத்தின்" கீழ், சுகாதாரப் பணியாளர்களின் திறன் மேம்பாடு, ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் கொள்முதல், ரேபிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான விழிப்புணர்வை உருவாக்குதல், ஆய்வுக் கூட்டங்கள், கண்காணித்தல், மாதிரி வெறிநாய்க்கடி நோய் தடுப்பு சிகிச்சை நிலையங்கள் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மற்றும் செயல்திட்டத்தின்படி, கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெறிநாய்க்கடி தடுப்பூசியை வாங்குவதற்கு மாநிலங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறது. கடந்த 3 நிதியாண்டுகளில் 127.37 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வாங்குவதற்காக மத்திய அரசின் பங்காக மொத்தம் ரூ.719.73 லட்சம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், நாய்களுக்கு 101.54 லட்சம் தடுப்பூசியும், 12.85 லட்சம் பிற விலங்குகளுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசியும், 24.53 லட்சம் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் ஒழிப்புக்கான தேசிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042170
BR/KR
***
(Release ID: 2042462)
Visitor Counter : 42