சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள 9 மாநிலங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் - மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
Posted On:
02 AUG 2024 7:53PM by PIB Chennai
டெங்கு பாதிப்பை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்டசி அமைப்புகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா அறிவுறுத்தியுள்ளார். அதிக
பாதிப்புள்ள மாநிலங்களில் டெங்கு நிலைமையை ஆய்வு செய்யவும், தயார்நிலையை மேம்படுத்தவும் மத்திய சுகாதாரத் துறை சார்பில் உயர்நிலைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா, பருவமழை தொடங்கி இருப்பது மற்றும் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
டெங்கு நோய் பொதுவாக அக்டோபரில் உச்சத்தை அடையும் என அவர் சுட்டிக்காட்டினார். வரவிருக்கும் மாதங்களில் மாநிலங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் வலியுறுத்தினார். கடந்த நான்கு ஆண்டுகளில் நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார். அரசின் முயற்சிகள் காரணமாக 1996-ல் 3.3% ஆக இருந்த டெங்கு இறப்பு விகிதம் 2023-ல் 0.17% ஆக குறைந்துள்ளது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் கூறினார்.
டெங்கு நோயாளிகளை திறம்பட மருத்துவமனை நிர்வகிக்க மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று திரு அபூர்வ சந்திரா அறிவுறுத்தினார். நோய் அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் காணுதல், கொசு ஒழிப்பு கண்காணிப்பை அதிகரித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு எஸ்.பி.சிங், டெங்கு பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
இந்தக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 18 மாநகராட்சி அதிகாரிகளும் கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்றனர்.
*****
PLM/DL
(Release ID: 2041112)
Visitor Counter : 52