ஜல்சக்தி அமைச்சகம்
வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை
Posted On:
01 AUG 2024 3:45PM by PIB Chennai
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டில் மாவட்டங்களின் தரவுகள் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை. மண் அரிப்பு தடுப்பு திட்டங்கள் உள்ளிட்ட வெள்ள மேலாண்மை திட்டங்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே தங்கள் சொந்த நிதியில், முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகின்றன. முக்கியமான பகுதிகளில் வெள்ள மேலாண்மைக்காக, தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் ஊக்குவிப்பு நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
வெள்ள மேலாண்மையின் கட்டமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, வெள்ளக் கட்டுப்பாடு, மண் அரிப்பு தடுப்பு, வடிகால் மேம்பாடு, கடல் அரிப்பு தடுப்பு போன்ற பணிகளுக்காக, மாநிலங்களுக்கு மத்திய நிதியுதவி வழங்கும் வகையில் 11 மற்றும் 12-வது ஐந்தாண்டு திட்டங்களின் போது மத்திய அரசு வெள்ள மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்தியது. இது பின்னர் 2017-18 முதல் 2020-21 வரையிலான காலத்திற்கு "வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதிகள் திட்டத்தின்" ஒரு அங்கமாக தொடர்ந்து, வரையறுக்கப்பட்ட ஒதுக்கீட்டுடன் 2026 ஆம் ஆண்டு வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.
முதலாம் முழுமைத் திட்டம் மற்றும் நதி மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் எல்லைப் பகுதி பணிகள் (RMBA) திட்டத்தின் கீழ் மார்ச் 2024 வரை பல்வேறு மாநிலங்களுக்கு மொத்த மத்திய நிதியுதவியாக முறையே ரூ.7106.47 கோடி மற்றும் ரூ.1258.73 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
2024 மார்ச் வரை பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 427 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, சுமார் 5.04 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு பாதுகாப்பு அளித்து, சுமார் 53.69 மில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். தற்போது, பல்வேறு மாநிலங்களில் முதலாம் முழுமைத் திட்டத்தின் கீழ் 35 திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதலாம் முழுமைத் திட்டத்தின் கீழ், மாநில வாரியாக நடைபெற்று வரும் திட்டங்களின் விவரங்கள் வருமாறு:
கட்டமைப்பு சாரா நடவடிக்கையாக, மத்திய நீர் வளம் ஆணையம் நாடு முழுவதும் வெள்ள முன்னறிவிப்பு வலையமைப்பை நிறுவி, 340 நிலையங்களில் வெள்ள முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பாதிப்பின் அளவு பற்றிய முன்னறிவிப்புகள், மக்களை வெளியேற்றுதல், மக்களையும், அவர்களது அசையும் உடைமைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் போன்ற மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடிவு செய்ய பயனீட்டாளர் முகமைகளுக்கு உதவுகின்றன. நீர்த்தேக்கங்கள் பாதுகாப்பாக கீழ்நோக்கி செல்வதற்கும், பருவமழை இல்லாத காலங்களில், நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் போதுமான அளவு நீர் இருப்பை உறுதி செய்வதற்கும் நீர்வரத்து முன்னறிவிப்பு, பல்வேறு அணை அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.
1986 முதல் 2022 வரையிலான செயற்கைக்கோள் படங்களின் தரவுகளின் அடிப்படையில், 'இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் மதிப்பீடு' குறித்த மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்த பகுதிகள் 21.213 Mha ஆகவும், மத்திய / மாநில அரசால் வெள்ள மேலாண்மைக்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதி 20.538 Mha ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டின் ராஷ்டிரிய பாத் ஆயோக்கின் (RBA) அறிக்கையின்படி, மொத்தம் 33.516 Mha பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது & 9.77 Mha பகுதி வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு. ராஜ் பூஷண் சவுத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
********
MM/KPG/DL
(Release ID: 2040499)