கலாசாரத்துறை அமைச்சகம்
ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கம்
Posted On:
29 JUL 2024 4:00PM by PIB Chennai
மத்திய அரசின் ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கம், மாநிலம், யூனியன் பிரதேசங்களை இணைத்தல், அனுபவக் கற்றல் என்ற கருத்தாக்கத்தின் மூலம் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச மக்களிடையே பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொழிக் கற்றல், கலாச்சாரம், பாரம்பரியம், இசை, சுற்றுலா, உணவு வகைகள், விளையாட்டு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற துறைகளில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நீடித்த மற்றும் கட்டமைக்கப்பட்ட கலாச்சார தொடர்பை மேம்படுத்துவதற்காக 16 அமைச்சகங்களும், துறைகளும் அதற்கான நடவடிக்கைகளை ஆண்டு முழுவதும் மேற்கொள்கின்றன.
இதில் இளையோர் சங்கம் என்பது ஒரு தொடர்ச்சியான கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றமாகும். இதில் பங்கேற்பவர்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழி, இலக்கியம், உணவு வகைகள், திருவிழாக்கள், மரபுகள், கலை வடிவங்கள், கட்டடக்கலை, பொறியியல் மற்றும் வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.
காசி தமிழ்ச் சங்கமம் மூலம் பழங்கால இந்தியாவின் இரண்டு புகழ்பெற்ற மையங்களான தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான வரலாற்று தொடர்புகளைக் கொண்டாடுவதற்கும், வலுப்படுத்துவதற்கும் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 3,900 தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு 8 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர். இதன் கீழ் கருத்தரங்குகள், செயல்முறை விளக்கங்கள், கலாச்சார பரிமாற்றங்கள், கைத்தறி, கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் வரலாற்று அடையாளங்களை வெளிப்படுத்தும் கண்காட்சிகள் ஆகியவை இடம் பெற்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
---
IR/KPG/DL
(Release ID: 2038737)
Visitor Counter : 84