அணுசக்தி அமைச்சகம்

‘ஒரு அணுசக்தித் துறை ஒரு ஆய்விதழ்’ என்ற திட்டத்தை அணுசக்தி துறை தொடங்கியுள்ளது

Posted On: 29 JUL 2024 1:46PM by PIB Chennai

‘ஒரு அணுசக்தித் துறை ஒரு ஆய்விதழ்’ என்ற  திட்டம் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் இன்று தொடங்கப்பட்டது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கும், படிப்பதற்கும் ஒரே குடையின் கீழ், அணுசக்தித் துறையின் அனைத்து அலகுகள்/  துணை அலகுகளை ஒருங்கிணைப்பது இந்தத் திட்டத்தின் தனித்துவமாகும். இந்த முன்முயற்சி காரணமாக டிஜிட்டல் முறையிலும், கூட்டாகவும் ஆதார வளங்களைப் பகிர்ந்துகொள்வது சாத்தியமாகும்.  இதற்காக வைலி இந்தியா பிரைவேட் லிமிட்டெட், ஸ்பிரிங்கர் நேச்சர் குரூப் ஆகியவற்றுடன் அணுசக்தித் துறை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

தொடக்க விழாவையொட்டி, அணுசக்தித் துறையின் செயலாளர்  டாக்டர் ஏகே மொகந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தத் திட்டத்தால் தேசிய ஹோமி பாபா கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களும், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் பயனடைவார்கள் என்று கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக ஒரே தேசம், ஒரே ஆய்விதழ் என்பதாக மாற்றமடைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்  அலுவலகம் முன்முயற்சி எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அணுசக்தித் துறையின்  கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவு தலைவர் திரு ஏகே நாயர் உரையாற்றுகையில், ஒரு அணுசக்தி துறை, ஒரு ஆய்விதழ் என்பது ஏராளமானோர்  எளிதாக அறிவைப் பெறுவதற்கு பயன்படும் என்று குறிப்பிட்டார். இது வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய டாடா நினைவு மையத்தின் இயக்குநர் டாக்டர் சுதீப் குப்தா, நூலகங்கள் என்பது இனிமேல் கற்களால் ஆன கட்டிடங்களாக இருக்காது என்றும் கணினிகளாக இருக்கும் என்றும் கூறினார். நடப்பு சகாப்தத்தில் அறிவியலை அனைவரும் அணுக செய்வதன் மூலம், முன்னோக்கிச் செல்லமுடியும் என்று  குறிப்பிட்ட அவர், எப்போதும் புதியப் பாதையைக் காட்டுவதில் முன்னோடியாக இருக்கும் அணுசக்தித் துறை மீண்டும் அதனை நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038366

***********

SMB/RS/KR



(Release ID: 2038538) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Marathi , Hindi