வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வீட்டுவசதி மானியம்

Posted On: 29 JUL 2024 1:10PM by PIB Chennai

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வீட்டுவசதி மானியம் வழங்கப்படுவதாக மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை இணையமைச்சர் திரு. டோகான் சாஹு கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பதில் வருமாறு:

'நிலம்,', 'மக்களை குடியேற்றுதல்' ஆகிய விஷயங்கள் மாநில அரசுகள் தொடர்புடையதாகும். எனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த தங்கள் குடிமக்களுக்கான வீட்டுவசதி தொடர்பான திட்டங்கள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படுகின்றன.

 

இருப்பினும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 25.06.2015 முதல் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மத்திய நிதியுதவியை வழங்குவதன் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக உள்ளது.

 

நாடு முழுவதும் உள்ள தகுதிவாய்ந்த அனைத்து நகர்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை குடிமை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளை வழங்கும் நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம், கூட்டு முயற்சியில் செலவு குறைந்த வீட்டுவசதி, குடிசைப்பகுதி மறுமேம்பாடு மற்றும் கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

குடிசைப்பகுதி மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம், ஏ.எச்.பி மற்றும் பி.எல்.சி திட்டங்களுக்கு ரூ.1.5 லட்சம் மத்திய உதவியாக இந்திய அரசு தனது நிலையான பங்கை வழங்குகிறது.

 

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர் ஆகியவற்றை சேர்ந்த பயனாளிகளுக்கு ஒரு வீட்டிற்கு ரூ.2.67 லட்சம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கையின்படி வீட்டின் மீதமுள்ள செலவு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்/பயனாளிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

 

இத்திட்டம் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நில உள்ளமைப்பு பிரிவு நீங்கலாக ஒப்பளிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் நிதி ஒதுக்கீடு முறை மற்றும் செயலாக்க முறையில் எவ்வித மாற்றமும் இன்றி கட்டி முடிக்கும் வகையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

திட்ட வழிகாட்டுதல்களின்படி, அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளிலும்  பிரதமரின் வீட்டுவசதித் திட்ட நகர்ப்புற முத்திரை மற்றும் பயனாளிகளின் விவரங்களைக் காட்சிப்படுத்துவதை உறுதி செய்வது கட்டாயமாகும். திட்டத்தின் பெயரை அப்படியே வைத்திருக்கவும், செயல்படுத்தல்,தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகளின் போது எந்த வகையிலும் அதை மாற்ற வேண்டாம் என்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

***

(Release ID: 2038335)
PKV/RR/KV



(Release ID: 2038439) Visitor Counter : 40


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP