விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளுக்கு சேமிப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள்
प्रविष्टि तिथि:
26 JUL 2024 6:27PM by PIB Chennai
சேமிப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் துணை திட்டமான வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, வேளாண் பொருட்களுக்கு சேமிப்புத் திறன் வசதியை மேம்படுத்துவதற்காக மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களில் கிடங்குகள், சேமிப்பு இடங்களை கட்டுவது, புதுப்பிப்பது ஆகியவற்றுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ், தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு திட்டத்தின் மூலதன செலவு அடிப்படையில் 25% மற்றும் 33.33% என்ற அளவில் மானியம் வழங்கப்படுகிறது. தனிநபர்கள், விவசாயிகள், விவசாயிகளின் குழுக்கள், வேளாண் தொழில்முனைவோர், பதிவுசெய்யப்பட்ட வேளாண் உற்பத்தி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாநில அமைப்புகள் ஆகியவற்றுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. தேவையின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் 1.4.2001-ல் தொடங்கப்பட்டது முதல், 30.6.2024 வரையான காலத்தில் ஒட்டுமொத்தமாக 48,512 சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 93.99 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்க முடியும். இதில், ரூ.4,734.73 கோடி அளவுக்கு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேளாண் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், நிதி உதவியுடன் சமூக வேளாண்மை சொத்துக்கள், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை கட்டமைப்பு திட்டங்கள் மூலம், நடுத்தர கால முதல் நீண்டகாலம் வரையிலான கடனுக்கு நிதி வழங்குவதற்காக ஜூலை 2020-ல் வேளாண் கட்டமைப்பு நிதியம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், ரூ.1 லட்சம் கோடி வரையான கடனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆண்டுக்கு 3% அளவுக்கு வட்டி தள்ளுபடியும், ரூ.2 கோடி வரையான கடனுக்கு உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
18.07,2024-ன்படி, வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ரூ.11,258 கோடி மதிப்பில் 13,353 சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்ட தகவல்களின்படி, 1.7.2024-ல் இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில அமைப்புகளில் 837.68 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு பொருட்களை சேமித்து வைப்பதற்கான வசதிகள் உள்ளன. எனினும், நாட்டில் 604.02 லட்சம் மெட்ரிக் டன் பொருட்களே சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்திய உணவுக் கழகத்தில் சேமிப்புத் திறனுக்கான தேவை என்பது, கொள்முதல் அளவு, பெருமளவிலான பொருட்களுக்கான தேவை, அரிசி மற்றும் கோதுமைக்கான பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சேமிப்புத் திறன் குறித்து இந்திய உணவுக் கழகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- தனியார் தொழில்முனைவோர் உத்தரவாதத் திட்டம்
- மத்திய அரசு திட்டம்
- அரசு, தனியார் கூட்டமைப்பு முறையில் சேமிப்புக் கிடங்குகள் கட்டுமானம்
- மாநில அமைப்புகள் உள்ளிட்டவற்றிடமிருந்து கிடங்குகளை வாடகைக்கு எடுப்பது
- தனியார் சேமிப்புக் கிடங்கு திட்டம்மூலம், கிடங்குகளை வாடகைக்கு எடுப்பது
- சொத்து விற்பனை மூலம் கிடங்குகளை உருவாக்குவது.
இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
===
(रिलीज़ आईडी: 2038141)
आगंतुक पटल : 77