விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவநிலை மாற்றத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

Posted On: 26 JUL 2024 6:29PM by PIB Chennai

பருவநிலையை எதிர்கொள்ளும் வகையிலான வேளாண்மையில் தேசிய புத்தாக்கம் என்ற பெயரில் முன்னுரிமை திட்டத்தை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. பயிர்கள், கால்நடைகள், தோட்டப் பயிர்கள் மற்றும் மீன்வளத் துறையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்தத் திட்டம் ஆய்வுசெய்கிறது. மேலும், வேளாண்மையில் பருவநிலையை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை உருவாக்கச் செய்கிறது. இதன்மூலம், வறட்சி, வெள்ளம், வெப்பஅலை போன்ற மோசமான பருவநிலைகள் உள்ள மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்களில் அதனை எதிர்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முக்கியமான சாதனைகளை தற்போது பார்க்கலாம்:

  • கடந்த 10 ஆண்டுகளில் (2014-2024), ஒட்டுமொத்தமாக 2,593 வகையான விதைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில், 2,177 இனங்களால், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும்.
  • பருவநிலை மாற்ற வழிமுறைகளை ஏற்படுத்தும் அரசுகளுக்கு இடையேயான குழுவின்படி, 651 வேளாண் மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தால் வேளாண்மைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 109 மாவட்டங்கள் மிகவும் அதிக பாதிப்புகளையும், 201 மாவட்டங்கள் உயர்ந்தபட்ச பாதிப்புகளையும் கொண்டததாக இருப்பது கண்டறியப்பட்டது.
  • வறட்சி, வெள்ளம், பருவம் தவறிய மழை, வெப்பநிலை, கடும் குளிர், சூறைக்காற்று, புயல் போன்ற வானிலை தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த 651 மாவட்டங்களில் மாவட்ட அளவிலான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பிட்ட இடம் சார்ந்த பருவநிலையை எதிர்கொள்ளும் பயிர்கள் மற்றும் இனங்கள் குறித்தும், சிறந்த மேலாண் நடைமுறைகள் குறித்தும் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
  • விவசாயிகள் மத்தியில் பருவநிலை மாற்றத்தால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது நிக்ரா திட்டம் மூலம் விழிப்புணர்வை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஏற்படுத்தி வருகிறது. பருவநிலையை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், திறன் வளர்ப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 151 மாவட்டங்களில் பருவநிலையை எதிர்கொள்ளும் வகையிலான வேளாண் தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின்மூலம், பருவநிலையை எதிர்கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் வேளாண்மையை பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

.

****


(Release ID: 2038140) Visitor Counter : 62


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP