விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் துறையில் கார்பன் வர்த்தக வழிமுறை

Posted On: 26 JUL 2024 6:32PM by PIB Chennai

கார்பன் வர்த்தக வழிமுறைகளை அமல்படுத்துவதற்காக டிசம்பர் 2023-ல் கார்பன் சேர்ப்பு வர்த்தக திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. கார்பன் வர்த்தகத்துக்கான வழிமுறைகளின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துறையாக வேளாண் துறை உள்ளது. வழிமுறைகளின்படி, தேவையான வரம்புகளை பூர்த்திசெய்து கார்பன் சேர்ப்பு சான்றிதழ்களை வெளியிடுவதற்காக பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் பதிவுசெய்துகொள்ள முடியும்.

கார்பன் சேர்ப்பு பலன்களை பெறுவதற்காக சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் வேளாண் துறைக்காக விருப்ப கார்பன் சந்தையை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை உருவாக்கியுள்ளது. விவசாயிகளுக்கு கார்பன் சந்தைகளை அறிமுகப்படுத்துவதன்மூலம், விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். மண், நீர், உயிரிபரவல் போன்ற இயற்கை மூலதனத்தை மேம்படுத்தும் வகையில் கார்பன் சேர்ப்பு மற்றும் மற்ற வேளாண் சுற்றுச்சூழல் பலன்கள் மூலம், விவசாயிகள் கூடுதல் வருவாயை ஈட்டுவதுடன், நீடித்த வேளாண் நடைமுறைகளை பின்பற்ற முடியும்.

வேளாண் துறையில் தாமாகவே கார்பனை சேர்க்கும் நடவடிக்கையின்மூலம், விவசாய சமூகத்தினர் மத்தியில் கார்பன் சந்தையை ஊக்குவிக்க முடியும். மேலும், நீடித்த வேளாண்மைக்கான நடைமுறைகளுக்கு நிதியளிக்க முடியும். பங்குதாரர்களிடையே திறனை வளர்ப்பதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நீடித்த வேளாண் நடைமுறைகளைப் பின்பற்ற விவசாயிகளை ஊக்குவிப்பதும் விருப்ப கார்பன் சேர்ப்பு வழிமுறையின் முக்கிய நோக்கமாக உள்ளது. நீண்டகால அடிப்படையில், இது நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டவும், ஊரக வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கவும், வேளாண் துறையில் நெகிழ்வுத் தன்மையை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யும்.

இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

*****

 



(Release ID: 2038137) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP