மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

Posted On: 26 JUL 2024 5:34PM by PIB Chennai

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் (DPI - டிபிஐ) பல்வேறு களங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இது அணுகல், செயல்திறன், உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய சில டிபிஐ-களில் செய்யப்பட்ட முன்னேற்றங்கள் பின்வருமாறு:

ஆதார்: ஆதார் என்பது உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாள திட்டமாகும். இது பயோமெட்ரிக், மக்கள்தொகை அடிப்படையிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குகிறது. இது எந்த நேரத்திலும், எங்கிருந்தும் அங்கீகரிக்கப்படலாம். போலி அடையாளங்களை இது நீக்குகிறது. இதுவரை 138.04 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI -யுபிஐ): இது இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கட்டண தளமாகும். 2024 ஜூன் மாதத்தில் மட்டும் 1,388 கோடிக்கும் அதிகமான நிதி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் செய்யப்பட்டுள்ளன. யுபிஐ அடிமட்டம் வரை நிதி உள்ளடக்கத்திற்கு பங்களித்துள்ளது.

டிஜிலாக்கர்: இது ஆவணங்கள், சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கும் சரிபார்ப்பதற்கும் ஒரு தளமாகும். இது 30 கோடிக்கும் அதிகமான பயனர்களுக்கு வசதி செய்துள்ளது. 

தேசிய, சர்வதேச அளவில் இந்திய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில முக்கிய முன்முயற்சிகள் பின்வருமாறு:

இந்தியா ஸ்டேக் குளோபல் (https://www.indiastack.global/) : இது இந்திய டிபிஐ-களின் வெற்றியை உலகளாவிய சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளவும், நட்பு நாடுகளில் பிரதிபலிப்பை எளிதாக்கவும் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய டிபிஐ களஞ்சியம் - 2023-ம் ஆண்டில் ஜி20 இந்திய தலைமையின் கீழ், உலகளாவிய டிபிஐ களஞ்சிய (GDPIR) தளம் (https://www.dpi.global/) இந்தியாவால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆர்மீனியா, சியரா லியோன், சுரினாம், ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பப்புவா நியூ கினியா, டிரினிடாட் - டொபாகோ, தான்சானியா, கென்யா, கியூபா - கொலம்பியா ஆகிய 10 நாடுகளுடன், வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

மாநிலங்களவையில்  கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்னணு - தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

PLM/DL
 


(Release ID: 2037958) Visitor Counter : 56


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP