குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் நாடாளுமன்றத்தின் முதன்மையான பணி - குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 27 JUL 2024 4:11PM by PIB Chennai

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதும், ஜனநாயகத்தை பாதுகாப்பதும் நாடாளுமன்றத்தின் முதன்மையான பணி என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாக்க நிகழ்ச்சியில் இன்று (27-07-2024) அவர் பங்கேற்று உரையாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தின் தீவிர பாதுகாவலர்கள் என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே பேசுவது, பின்னர் வெளியேறுவது போன்ற செயல்கள் குறித்து திரு ஜக்தீப் தன்கர் மிகுந்த கவலை தெரிவித்தார். பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல்களை நடத்தும் போக்கு உறுப்பினர்களிடையே அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

அவசர நிலை இந்திய ஜனநாயகத்தில் வலி மிகுந்த, இதயத்தை நொறுக்கும்  இருண்ட அத்தியாயம் என்று கூறிய திரு ஜக்தீப் தன்கர், அந்த நேரத்தில் நமது அரசியலமைப்பு வெறும் காகிதமாக சுருங்கி, அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்பட்டு, தலைவர்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டனர் என்று கூறினார்.

நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து பெருமிதம் தெரிவித்த திரு ஜக்தீப் தன்கர், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் என்றும், அவசர நிலைக் காலம் தவிர பிற காலங்களில் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர் என்றும் கூறினார்.

குறுகிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து தேசியவாதத்துக்கும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட பார்வைக்கும் மாற வேண்டும் என்று அவர் கூறினார்.

அவையில் பேசும் உறுப்பினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நாடாளுமன்ற சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும்தான் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு பிரதமர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார் என்று குறிப்பிட்ட திரு ஜக்தீப் தன்கர், கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அவையின் தலைவர் என்ற முறையில் பிரதமரின் சிறப்பான பங்களிப்பை எடுத்துரைத்தார். மாநிலங்களவையில் சமீபத்தில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

அவையில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை குடியரசுத் துணைத் தலைவர் உறுதியாக நிராகரித்தார். அடிப்படைக் கொள்கைகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் கண்ணியத்தை பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களான நிர்வாகம், நீதித்துறை, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவை பலவீனமடைவது இறுதியில் சாதாரண குடிமகனை பாதிக்கும் என்று திரு ஜக்தீப் தன்கர் சுட்டிக்காட்டினார். சபையில் கண்ணியமான, ஆக்கபூர்வமான விவாதங்கள், உரையாடல்கள் நடைபெற வேண்டும் என்று குடியரசுத்துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.

****

PLM/DL


(Release ID: 2037944) Visitor Counter : 85