மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
                
                
                
                
                
                    
                    
                        பிரதமரின் கிராமப் புற டிஜிட்டல் கல்வி இயக்கத்தின் கீழ் 7.35 கோடி பேர் பதிவு செய்து 6.39 கோடி பேர் பயிற்சி பெற்றுள்ளனர் - இத்திட்டத்தின் கீழ் 4.78 கோடி பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                26 JUL 2024 5:35PM by PIB Chennai
                
                
                
                
                
                
                கிராமப்புற இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவுக்காக "பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் (PMGDISHA)" எனப்படும் பிரதமரின் கிராமப் புற டிஜிட்டல் கல்வி இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 7.35 கோடி நபர்கள் சேர்க்கப்பட்டு, 6.39 கோடி நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 4.78 கோடி நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் 17,04,537 பேர் பதிவு செய்து அவர்களில் 14,07,880 பேர் பயிற்சி பெற்று, அதில் 10,55,235 பேர் சான்றிதழ்களைப் பெற்றனர்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
இந்த திட்டம் 6 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு வீட்டிற்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் கிராமப்புறங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது.
பயனாளிகளுக்கு 20 மணி நேர பயிற்சி வழங்கப்பட்டது. 
(i) டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகம், 
(ii) டிஜிட்டல் சாதனங்களை இயக்குதல், (iii) இணைய அறிமுகம், 
(iv) இணையத்தைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு, 
(v) இணையத்தைப் பயன்படுத்தி மக்களை மையமாகக் கொண்ட சேவைகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் ஆகிய 5 பாடத்திட்டங்களைக் கொண்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி உள்ளடக்கம் 22 அட்டவணை மொழிகளிலும் ஆங்கிலத்திலும் அமைக்கப்பட்டது. 
 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அவர்களின் டிஜி-லாக்கர் கணக்குகளில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.
மேலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அறிவியல் அமைப்பான தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) அதன் 52 மையங்கள், 720-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், 9,500-க்கும் மேற்பட்ட உதவி மையங்கள் மூலம் தகவல் தொழில்நுட்பம் - மின்னணுவியல் துறையில் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மின்னணு - தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
****
PLM/DL
 
                
                
                
                
                
                (Release ID: 2037943)
                Visitor Counter : 91