சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

தேசிய சட்டப் பணிகள் ஆணையம், துணை சட்ட தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான விரிவான தொகுப்பைத் தயாரித்துள்ளது

Posted On: 26 JUL 2024 1:24PM by PIB Chennai

அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்ட உதவி தன்னார்வத் தொண்டர்கள் திட்டம் 2009-ம் ஆண்டு தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 2017-ல் திருத்தப்பட்டதுடன் சட்ட துணை தன்னார்வலர்களுக்கான திட்டம் என்று பெயரிடப்பட்டது. பொதுமக்களுக்கும், சட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்துபவர்களாக செயல்பட்டு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சட்டம் சார்ந்த துணை தன்னார்வத் தொண்டர்கள் செயல்படுவார்கள்.

துணை சட்ட தன்னார்வலர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, அவர்களது பயிற்சிக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான பயிற்சித் தொகுப்பை தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தயாரித்துள்ளது. நீதி குறித்த அரசியலமைப்புச் சட்ட தொலைநோக்கு, குற்றவியல் சட்டத்தின் அடிப்படைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள், சிறார்களுக்கான சட்டங்கள், பெண்கள் - மூத்த குடிமக்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து துணை சட்ட தன்னார்வலர்களுக்குத் தகவல் அளித்து உணர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இது செயல்முறைகள் பற்றிய அறிவு, சமூகத்தை அறியும்திறன், மென்மையான நடத்தை திறன்கள், தகவல்தொடர்பு திறன்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த திறன்கள் பலதரப்பட்ட மக்களைக் கையாள்வதற்கு அவசியமானது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரின் மேற்பார்வையின் கீழ், இந்த தன்னார்வலர்களுக்குப் பயிற்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

2023-24 -ம் நிதியாண்டில் இந்த தன்னார்வலர்களுக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 64 பயிற்சித் திட்டங்களும், 2024-25-ம் ஆண்டில் மே மாதம் வரை 13 பயிற்சித் திட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மத்திய சட்டத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு)  திரு அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

PLM/DL

 



(Release ID: 2037904) Visitor Counter : 3


Read this release in: English , Urdu , Hindi