தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத் துறை ஆலோசனைக் குழுக்களுடன் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா ஆலோசனை
Posted On:
15 JUL 2024 8:42PM by PIB Chennai
மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் தொலைத் தொடர்புத் துறை ஆலோசனைக் குழுக்களின் இரண்டு நாள் கூட்டம் 2024 ஜூலை 15 அன்று புதுதில்லியில் தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு சந்திர சேகர் பெம்மசானியும் இதில் பங்கேற்றார். நாட்டின் தொலைத்தொடர்புச் சூழல் அமைப்பை விரிவுபடுத்துவதிலும், சிறப்பாக மாற்றி அமைப்பதிலும் இந்த தொழில்துறையினரை ஈடுபடுத்துவதை நோக்கமாக கொண்டு இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
தொலைத் தொடர்புத் துறை தொடர்பான அம்சங்களில் அரசுடன் நிலையான இருவழிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்யும் நோக்கில், அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, ஆலோசனைகளை வழங்க ஆறு தனித்துவமான குழுக்களை அமைத்துள்ளார்.
முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் இந்த ஆறு ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தொலைதூரப் பகுதிகளிலும் குறைந்த வசதிகள் கொண்ட பகுதிகளிலும் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவது, தொலைத் தொடர்பு உபகரணங்களின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது, விநியோகச் சங்கிலி சிக்கல்களைத் தீர்ப்பது போன்றவை குறித்து இந்த இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்த விவாதங்கள் ஆக்கப்பூர்வமான முடிவுகளை ஏற்படுத்தும் என்று அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார். தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், கொள்கை சீர்திருத்தங்களையும் முன்நோக்கிக் கொண்டு செல்வதில் தொலைத் தொடர்பு தொழில்துறையினருடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த முயற்சிகள் இந்தியாவை தொலைத்தொடர்புத் துறையில் உலகளாவிய முன்னணி நாடாகவும், தற்சார்பு நாடாகவும் மாற்றும் என திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
***
PLM/KV/KR
(Release ID: 2033566)
Visitor Counter : 74