பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார் - அரசின் கொள்கைகள், திட்டங்கள், நாட்டு நடப்பு குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்

Posted On: 12 JUL 2024 6:50PM by PIB Chennai

மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் தமது இல்லத்தில் பல்வேறு  அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்களின் பத்திரிகையாளர்களுக்கு  மதிய உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  அரசுத் திட்டங்கள், கொள்கைகள் போன்ற பல்வேறு விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும்,  தற்போதைய நாட்டு நடப்பு தொடர்பான விஷயங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நிர்வாக சீர்திருத்தம், பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஊடகவியலாளர்களின் கருத்துகளை  அமைச்சர் கேட்டறிந்தார்.

ஊடகவியலாளர்களின் பங்கு ஒரு ஜனநாயகத்தில் இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொள்வதற்கும், நமது பொதுவான தேசிய இலக்குகளை நோக்கிச் செயல்படுவதற்கும் இது போன்ற அலுவல் ரீதியில் அல்லாத உரையாடல்கள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு தகவல் அளிப்பதிலும், பொதுமக்களின் கருத்தைக் கேட்பதிலும்  ஊடகங்கள் ஆற்றும் முக்கிய பங்கை அமைச்சர் பாராட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.  வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். ஜனநாயக செயல்முறைகளில் ஆக்கபூர்வமான விமர்சனத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.  

அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி, புவி அறிவியல், அணுசக்தி ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியையும் அவர் விளக்கினார். தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட்ட பின்னர் விண்வெளித் துறையில், இரண்டே ஆண்டுகளில் 200 விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 2014-ம் ஆண்டில் 10 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் உயிரி பொருளாதாரம், கடந்த 10 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்து 2024-ல் 130 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். எரிசக்தி பாதுகாப்பைப் பொறுத்தவரை, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் அணுமின் உற்பத்தித் திறன் சுமார் 70 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.


****************

PLM/KV



(Release ID: 2032989) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP