பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலின் 69வது பதிப்பை வெளியிட்டார்

Posted On: 09 JUL 2024 5:20PM by PIB Chennai

மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஐஏஎஸ் அதிகாரிகளின் சிவில் பட்டியல் 2024-ன் 69வது பதிப்பை புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தப் பதிப்பு மின் பதிப்பாக வந்துள்ளது எனவும், இது 4-வது மின் பதிப்பு என்றும் குறிப்பிட்டார். இந்த நடைமுறை காகிதப் பயன்பாட்டை தவிர்ப்பதுடன் செலவையும் மிச்சப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் எளிதில் கிடைப்பதாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகும் என்றும் அவர் கூறினார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சிவில் பட்டியலை வெளியிடும் பணி 1960-களில் தொடங்கியது என்றார் அவர்.

நிர்வாகத்தில் சிறந்த மற்றும் தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளின் பயன்பாடு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். அரசு எளிதாகச் செயல்பட அடுத்த தலைமுறைக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச நிர்வாகம்' என்ற தொலைநோக்குப் பார்வை மிஷன் கர்மயோகி இயக்கத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக அவர் கூறினார். அமிர்த காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகளின் திறன்கள் மேம்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள், நல்லாட்சியுடன் வெளிப்படைத்தன்மை ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின்  முக்கிய நோக்கங்களாக உள்ளன என்றார் அவர்.

இந்தப் பட்டியலில் கிட்டத்தட்ட 6000-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன என்று இந்நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் குமார் பல்லா கூறினார். 01.01.2024 அன்றைய தேதிப்படி ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிநிலை, கல்வித்  தகுதி போன்ற விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

***

PKV/PLM/RR/DL



(Release ID: 2031845) Visitor Counter : 37