தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்திய தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் திருமதி சுமிதா தவ்ராவுடன் தொழில்துறையினர் கலந்துரையாடினர்
Posted On:
06 JUL 2024 4:04PM by PIB Chennai
ஹைதராபாத்தில் 2024 ஜூலை 5 அன்று இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழிலதிபர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழில்துறை கலந்துரையாடலில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, இந்தியாவின் வேகமான வளர்ச்சி விகிதங்களை எடுத்துரைத்தார். மேலும் இந்தியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவை என்று அவர் கூறினார்.
29 தொழிலாளர் சட்டங்களை நான்கு விரிவான குறியீடுகளாக ஒருங்கிணைப்பது குறித்து திருமதி தவ்ரா விவரித்தார். இதில் ஒழுங்குமுறைகள் மற்றும் நிர்வாக செயல்முறைகளை எளிமைப்படுத்துவது உட்பட, தொழிலாளர் சட்டங்களை குற்றமற்றதாக்குவது, அதன் மூலம் வணிகம் செய்வதை எளிதாக்குவது மற்றும் இணக்கச் சுமையை குறைப்பது ஆகியவை அடங்கும் என்று அவர் தெரிவித்தார். இது மேம்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது என்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் உட்பட பல்வேறு முயற்சிகளின் மூலம் 2047-ம் ஆண்டில் இது 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். தொழிலாளர் அரசு காப்பீட்டுக் நிறுவனம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆகியவற்றில் நிர்வாக சீர்திருத்தங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு சீர்திருத்தங்கள் குறித்த இந்த விவாதங்களில் ஈடுபட ஆர்வமுள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இபிஎஃப்ஒ, இஎஸ்ஐசி மற்றும் தெலுங்கானா மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.
***
PLM/KV
(Release ID: 2031263)
Visitor Counter : 66