பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படை கப்பல் தபார் எகிப்தின் அலெக்சாண்டிரியா சென்றடைந்தது
Posted On:
27 JUN 2024 7:22PM by PIB Chennai
இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் தபார் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எகிப்து நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவுக்கு நல்லெண்ணப் பயணமாக ஜூன் 24 –ம் தேதி சென்றடைந்தது.
இந்தியாவும், எகிப்தும் பல நூற்றாண்டுகளாக கலாச்சார உறவுகள் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தி வருகின்றன. இந்தப் பிணைப்பு நவீன யுகத்திலும் தொடர்ந்து வலுவாக வளர்ந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளன. அலெக்சாண்டிரியாவுக்கு, இந்திய கடற்படைக் கப்பல் தபார் மேற்கொண்டுள்ள பயணம், எகிப்துடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், கடல்சார் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஎன்எஸ் தபார், ரஷ்யாவில் இந்தியக் கடற்படைக்காக கட்டப்பட்ட ஒரு போர்க்கப்பல் ஆகும். கேப்டன் எம்.ஆர்.ஹரிஷ் தலைமையில் 280 வீரர்களைக் கொண்டு இந்தக் கப்பல் இயங்கி வருகிறது. இந்தக் கப்பல் பல்துறை அளவிலான ஆயுதங்கள் மற்றும் உணர்கருவிகளைக் (சென்சார்) கொண்டுள்ளது. இந்தியக் கடற்படையின் ஆரம்பகால போர்க்கப்பல்களில் ஒன்றான இது, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் மும்பையில் செயல்பட்டு வருகிறது.
அலெக்ஸாண்ட்ரியாவில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் போது, கப்பலின் குழுவினர் எகிப்திய கடற்படையுடன் சமூக ஈடுபாடுகளைத் தவிர பல தொழில்முறை தொடர்புகளை மேற்கொள்வார்கள். அதன்பிறகு இரு கடற்படைகளும் கடலில் ஒத்திகை பயிற்சிகளை மேற்கொள்ளும். இரு கடற்படைகளும் பின்பற்றும் நடைமுறைகளில் உள்ள பொதுவான அம்சங்களை வலுப்படுத்துவதுடன், கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு இந்தப் பயிற்சி உதவும்.
***
(Release ID: 2029177)
VL/PKV/AG/RR
(Release ID: 2029219)
Visitor Counter : 73