பாதுகாப்பு அமைச்சகம்

விசாகப்பட்டினத்தில் கடற்படையின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்

Posted On: 14 JUN 2024 4:29PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 14, 2024) ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளைக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு இந்திய கடற்படையின் செயல்பாட்டு தயார்நிலையை ஆய்வு செய்துடன், ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பலில் பயணித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சராக திரு ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் அலுவல் ரீதியான புதுதில்லிக்கு வெளியேயான முதல் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின் போது கிழக்கு கடற்படை கட்டளையின் பல்வேறு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்களின் செயல்பாடுகளை பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய கடற்படையின் போர் திறன் மற்றும் தயார்நிலையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்திருந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, கிழக்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் ஆகியோர் இருந்தனர்.

கிழக்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் கலந்துரையாடிய திரு ராஜ்நாத் சிங், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட கடற்படையாக இந்தியக் கடற்படை உள்ளது என பாராட்டு தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள நமது நட்பு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பரஸ்பர முன்னேற்றப் பாதையில் செல்வதாக அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சியிலும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்துவதிலும் இந்தியக் கடற்படை முக்கியப் பங்கு வகிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். மார்ச் 2024-ல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து 23 பாகிஸ்தானியர்களை விடுவித்த இந்திய கடற்படையின் துணிச்சலான மீட்பு நடவடிக்கை குறித்து அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை, மனிதாபிமானத்தையும், கடற்படை வீரர்களின் மதிப்புமிக்க கடமையையும் எடுத்துக்காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.  பாதிக்கப்படுபவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் உதவ நமது கடற்படை முன்வருவதாக அமைச்சர் கூறினார்.

"நமது கடற்படை பாதுகாப்பான வர்த்தகத்தை உறுதி செய்வதும், இந்து மகா சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை ஊக்குவிப்பதும் மிகவும் பெருமைக்குரியது. சுதந்திரமான கடற்பயணம், விதிகள் அடிப்படையிலான உலக ஒழுங்கு, கடற்கொள்ளை எதிர்ப்பு மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவை நமது மிகப்பெரிய நோக்கங்களாகும். அவற்றை நிறைவேற்றுவதில் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியா, அதன் அதிகரித்து வரும் சக்தியுடன், பிராந்தியத்தையும், ஒட்டுமொத்த உலகையும் அமைதியாகவும், வளமாகவும் மாற்ற உறுதிபூண்டுள்ளது" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்தியாவின் கடல் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடற்படையின் வலிமை அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.  தேச நலன் அரசுக்கு மிக முக்கியமானது என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், அதைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சராக து இரண்டாவது பதவிக்காலத்தில், கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடற்படை வலிமையை மேலும்  வலுவானதாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

***

AD/PLM/AG/KV

 



(Release ID: 2025327) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Marathi , Hindi