குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஜெய்சால்மரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப்படை மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் உரையாற்றினார்

Posted On: 14 JUN 2024 12:27PM by PIB Chennai

ஜெய்சால்மரில் இன்று (14.06.2024) நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் உரையாற்றினார்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், இந்தப் படையினர் தமது கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர் என்றார்.

கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு சில நிமிடங்கள் நிற்பது கூட கடினம். ஆனால் எப்போதுமே மிக கடினமான சூழ்நிலைகளில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கடமையாற்றுவதாகவும், அவர்களது பணிச் சூழல் சவாலானது என்றும் அவர் தெரிவித்தார். இமயமலையின் உயர்ந்த பகுதிகள், தார் பகுதியின் சுட்டெரிக்கும் பாலைவன வெயில், வடகிழக்குப் பகுதியின் அடர்ந்த காடுகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது என்று அவர் மேலும் கூறினார்.

எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் ஒவ்வொரு கணமும் கடமை என்ற தாரக மந்திரத்துடன்  செயலாற்றுவதாகக் கூறினார். பாதுகாப்புப் படைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், நமது மகள்கள் தங்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சார்பு அதிகரித்து வருவது பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், ஒரு காலத்தில் சிறிய அளவிலான பொருட்கள் கூட இறக்குமதி செய்யப்பட்டன என்றார். ஆனால் இப்போது பெரிய அளவிலான பாதுகாப்புத் தளவாடங்களை நாமே உற்பத்தி செய்வதுடன், அவற்றை ஏற்றுமதியும் செய்வதாகக் கூறினார். நமது எல்லைப் பாதுகாப்புப் படை உலகிலேயே மிகப்பெரியது என்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.

ஊடுருவல், கடத்தல் போன்ற குற்றங்கள் மூலம் நாட்டை சீர்குலைக்கும் எதிரிகளின் முயற்சிகளை திறம்பட எல்லைப் பாதுகாப்புப் படையினர் முறியடிப்பதாக அவர் தெரிவித்தார்.  இந்த சவால்களை மேலும் சமாளிக்க நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் டாக்டர் நிதின் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

SMB/PLM/AG/KV



(Release ID: 2025265) Visitor Counter : 57