தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தேசிய எண்ணிடும் திட்டத்தில் திருத்தம் குறித்த ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது

Posted On: 06 JUN 2024 7:15PM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தேசிய எண் திட்டத்தில் திருத்தம்குறித்த தனது ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தொலைத்தொடர்பு சூழல் தற்போது அதிநவீன வலையமைப்புகள் மற்றும் சேவைகளால் இயக்கப்படும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. 5 ஜி தொழில்நுட்ப சேவையின் வருகை அதிவேக இணைப்பு, குறைந்தபட்ச தாமதம், விரிவான சாதன ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முன் எப்போதும் இல்லாத சாத்தியங்களை அறிமுகப்படுத்துகிறது. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்தச் சூழலில், திறமையான தகவல் தொடர்பு மற்றும் வலையமைப்பு நிர்வாகத்தை உறுதி செய்வதில் தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகள் (டி.ஐ.எஸ்) முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகளாவிய அணுகலுக்கான அடித்தளமாக டி.ஐ.எஸ் செயல்படுவதுடன், பல்வேறு தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களில் நுகர்வோர், வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கு நம்பகமான சேவை வழங்கலை எளிதாக்குகிறது.

2003-ஆம் ஆண்டில், சந்தாதாரர்களின் விரைவான அதிகரிப்புக்கு இடமளிக்க தேசிய எண் திட்டத்தின் விரிவான மதிப்பாய்வு மற்றும் திருத்தத்தை தொலைத்தொடர்புத் துறை மேற்கொண்டது. தேசிய எண்ணிடும் திட்டம் 2003 என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், நாடு முழுவதும் 750 மில்லியன் தொலைபேசி இணைப்புகளுக்கு எண் வளங்களை ஒதுக்க வடிவமைக்கப்பட்டது. இருப்பினும், 21 ஆண்டுகளுக்குப் பின், சேவைகளின் விரிவாக்கம் மற்றும் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக எண் வளங்கள் கிடைப்பது இப்போது ஆபத்தில் உள்ளது. 2024, மார்ச் 31 நிலவரப்படி தற்போது மொத்தமுள்ள 1,199.28 மில்லியன் தொலைபேசி சந்தாதாரர்கள் மற்றும் 85.69% தொலைத்தொடர்பு அடர்த்தியுடன், தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளின் பயன்பாட்டை மதிப்பிடுவது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு நிலையான தேக்கத்தை உறுதி செய்வதற்கான விவேகமான கொள்கை முடிவுகளை எடுப்பது மிக முக்கியமானது.

டிராய் சட்டம் 1997-ன் பிரிவு 11 (1) (ஏ)-ன் கீழ் திருத்தப்பட்ட தேசிய எண் திட்டம் குறித்து டிராய் பரிந்துரைகளைக் கோரி 2022, செப்டம்பர் 29 தேதியிட்ட குறிப்பை டிராய் பெற்றது.  விரைவான வளர்ச்சியின் விளைவாக போதுமான நிலையான வரிசை எண் வளங்கள் கிடைப்பது தொடர்பான தடைகளை நிவர்த்தி செய்யுமாறு தொலைத் தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆலோசனை அறிக்கை தொலைத்தொடர்பு, அடையாளங்காட்டி வளங்களின் ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டை பாதிக்கும் அனைத்துக்  காரணிகளையும் மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒதுக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு சாத்தியமான மாற்றங்களையும் இது முன்மொழிகிறது. பங்குதாரர்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெறுவதற்கான ஆலோசனை அறிக்கை டிராய் இணையதளத்தில் (https://trai.gov.in/release-publication/consultation) பதிவேற்றப்பட்டுள்ளது. தேசிய எண்ணிடல் திட்டத்தின் திருத்தம் குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் 2024, ஜூலை 04க்குள் பங்குதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன மற்றும் எதிர்க் கருத்துகள் 2024, ஜூலை 18க்குள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை, மின்னணு வடிவத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசகருக்கு advbbpa@trai.gov.in  jtadvbbpa-1@trai.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு +91-11- 20907757 என்ற எண்ணினைத் தொடர்பு கொள்ளலாம்.

***

(Release ID: 2023283)

SMB/BR/RR



(Release ID: 2023390) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi