பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை குறித்து அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுக்கு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் விளக்கம்
Posted On:
04 JUN 2024 12:42PM by PIB Chennai
அமெரிக்க அரசின் பிரதிநிதிகளுடனும், ஐ.பி.எம் மையத்துடன் பணிபுரியும் பங்குதாரர்களுடனும் 3 ஜூன் 2024 அன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாட இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு வாஷிங்டன், டி.சி.-இன், ஐ.பி.எம் அரசு அலுவல் மையம் அழைப்பு விடுத்திருந்தது. நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதை மையமாகக் கொண்ட 90 நிமிட கலந்துரையாடலில், பொது சேவைக்கான கூட்டாண்மையின் நிர்வாக துணைத் தலைவர் திரு ஜேம்ஸ்-கிறிஸ்டியன் பிளாக்வுட், ஐ.பி.எம் அரசு அலுவல் மையத்தின் நிர்வாக இயக்குநர் திரு டான் செனோக் மற்றும் அமெரிக்க அரசின் பிற பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய அரசின் சார்பாக நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் திரு சீனிவாஸ், இணைச் செயலாளர்கள் திரு என்.பி.எஸ்.ராஜ்புத், திருமதி ஜெயா துபே, தேசிய தகவல் மையத்தின் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் சுஷில் குமார், துறையின் துணைச் செயலாளர் திரு பார்த்தசாரதி பாஸ்கர், தேசிய தகவல் மையத்தின் மூத்த தொழில்நுட்ப இயக்குநர் திரு மனு கார்க் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை குறித்து திரு வி.ஸ்ரீனிவாஸ் விளக்கம் அளித்தார். ஐ.பி.எம் அரசு அலுவல் மையத்தின் செயல் இயக்குநர் திரு. டான் செனோக் இந்தக் கலந்துரையாடலை நடத்தினார். இதில் அமெரிக்க அரசு அதிகாரிகளிடமிருந்து ஏராளமான பாராட்டுகள் பெறப்பட்டன.
விளக்கக்காட்சியின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
• குடிமக்களுக்கும் அரசிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தின் திறனை அங்கீகரிப்பது.
• மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறையின் 10 அம்ச சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் விளைவாக குறை தீர்க்கும் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்றும் குறை தீர்ப்பதற்கான காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளது.
• மாதத்திற்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான குறைகளை நிவர்த்தி செய்வதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது மற்றும் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறை தளத்தில் 1.02 லட்சம் குறைதீர்ப்பு அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
• மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புமுறையின் 8-வது பதிப்பிற்கு ரூ.128 கோடி ஒதுக்கவும், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் தளத்தை அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்ததுடன், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குடிமக்களை மையமாகக் கொண்ட சிறந்த நடைமுறைகள் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவியாக இருந்தது.
***
(Release ID: 2022720)
TS/BR/RR
(Release ID: 2022726)
Visitor Counter : 83