சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஜெனீவாவில் நடைபெற்ற 77-வது உலக சுகாதார மாநாட்டின் ஒரு பகுதியாக டிஜிட்டல் சுகாதாரம் குறித்த நிகழ்ச்சியை இந்தியா நடத்தியது

Posted On: 29 MAY 2024 5:39PM by PIB Chennai

ஜெனீவாவில் நடைபெற்று வரும் 77-வது உலக சுகாதார மாநாட்டுக் கூட்டத்தின் போது, டிஜிட்டல் சுகாதாரம் குறித்த ஒரு  நிகழ்ச்சியை இந்தியா நடத்தியது. இதில் குவாட் நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா பங்கேற்றன. அத்துடன் இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். டிஜிட்டல் பொது சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள், உலக அளவில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கூட்டு முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மத்திய சுகாதாரத்துறைச் செயலாளரும், இந்திய தூதுக்குழுவின் தலைவருமான திரு அபூர்வ சந்திரா, டிஜிட்டல் சுகாதாரத்தில் இந்தியாவின் முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.  அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் சுகாதாரச் சேவைகளை மாற்றியமைப்பதில் டிஜிட்டல் நடவடிக்கைகளின் பங்கை அவர் குறிப்பிட்டார். கொவிட் பாதிப்பின் போது கோ-வின் இணையதளம் போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பெரிய அளவில் செயல்படுத்துவதில் இந்தியாவின் வெற்றியை அவர் குறிப்பிட்டார்.

வலுவான தேசிய டிஜிட்டல் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடர்பாகவும் அவர் பேசினார். டிஜிட்டல் கட்டமைப்பைப் பயன்படுத்தி சுகாதார இடைவெளிகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு மேற்கொண்ட பிற முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.

டிஜிட்டல் சுகாதாரத்தின் முக்கிய பங்கை இந்தக் கூட்டம் எடுத்துக் காட்டியது. உலகளாவிய சுகாதார சேவைகளை எதிர்காலத்தை வடிவமைப்பதில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அணுகுமுறை மற்றும் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் சுகாதார  அமைப்பில் இந்தியா ஒரு முன்னோடியாக வளர்ந்து வருவதும் இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஹெகாலி ஜிமோமி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

****

 

ANU/AD/PLM/KPG/DL



(Release ID: 2022117) Visitor Counter : 48