அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் மாநாட்டை நடத்தியது

Posted On: 28 MAY 2024 4:17PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 2024 மே 27 முதல் 28-ம் தேதி வரை தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான  இரண்டு நாள், மாநாட்டை நடத்தியது.

இந்தியச் சூழலில் பருவநிலை செயல்திட்டம், தரவுகளின் தரக் கட்டுப்பாடு, பருவநிலை கணிப்புகளை மேம்படுத்துதல், மக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதிலுமிருந்து நிபுணர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர்  உரையாற்றுகையில்,  இந்தியச் சூழலில் செயற்கை நுண்ணறிவில் அடிப்படை மாதிரிகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பல துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறை அவசியம் என்று அவர் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அகிலேஷ்  குப்தா பேசுகையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள்  குறித்து எடுத்துரைத்தார்.

சமூகங்கள் ஒன்றிணைந்து, பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல், தீர்வுகளை நோக்கி ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார்.

தில்லி ஐஐடி  இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி பேசுகையில், நிலக்கரியிலிருந்து மெத்தனால் உருவாக்குதல், நீல ஹைட்ரஜன் உற்பத்தி போன்ற புதுமையான சுற்றுச் சூழல்  தொழில்நுட்பங்களில் தில்லி ஐஐடி மேற்கொள்ளும் ஆராய்ச்சி முயற்சிகளை எடுத்துரைத்தார்.

தில்லி ஐஐடி, புவனேஸ்வர் ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், காஷ்மீர் பல்கலைக்கழகம், ஐஐஎஸ்சி, அலகாபாத் பல்கலைக்கழகம், வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி, இந்திய வானிலை ஆய்வுத் துறை, ஐசிஆர்ஐஎஸ்ஏடி, அறிவியல் தொழில்நுட்ப சிறப்பு மையங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

***

SRI/SMB/PLM/KV/DL



(Release ID: 2021976) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Telugu