திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தடைகளை உடைத்தல்: இந்தியா ஸ்கில்ஸ் திறன் போட்டியில் பெண்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்திப் பிரகாசிக்கின்றனர்

Posted On: 17 MAY 2024 6:58PM by PIB Chennai

தில்லி துவாரகாவின் யசோபூமியில் 2024 மே 15 முதல் 19-ம் தேதி வரை இந்தியா ஸ்கில்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.  ஆண்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகளில்  பெண்களின் பங்கேற்பு தற்போது அதிகரித்து வருகிறது. பெண் பங்கேற்பாளர்கள் ஆண்களுடன் நேருக்கு நேராகப் போட்டியிட்டு உற்சாகத்துடன் திறன்களை வெளிப்படுத்துகின்றனர். திறமைக்குப் பாலின எல்லைகள் இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர்.

இந்த ஆண்டு இந்தியா ஸ்கில்ஸ் போட்டி, 61 திறன் பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 900- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் வலைதள தொழில்நுட்பம் (வெப் டெக்னாலஜி), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி), வரைகலை தொழில்நுட்பம் (கிராஃபிக் டிசைன் டெக்னாலஜி), வண்ணம் தீட்டுதல் மற்றும் அலங்கரித்தல், மின் கட்டமைப்புகளை நிறுவுதல்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பிரிவுகளில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் சம வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு தளத்தை இப்போட்டி வழங்குகிறது. 

இந்தியா ஸ்கில்ஸ்- 2024 போட்டியில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளதாகவும்  இதில் அவர்கள் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்துவதாகவும் இந்தியா ஸ்கில்ஸ் 2024-ன் நடுவர் குழு உறுப்பினர் சோனு லாதர் கூறினார்.

மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது. இது மே 19 அன்று ஒரு பிரமாண்டமான விழாவுடன் நிறைவடையும்.

ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் (எஸ்ஐடிஎச்) இணைய தளத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் இப்போட்டிக்குப் பதிவு செய்தனர். அவர்களில் 26,000 பேர்  போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் இருந்து சுமார் 900 பேர் இந்தியா ஸ்கில்ஸ் தேசியப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு, டொயோட்டா கிர்லோஸ்கர், ஆட்டோடெஸ்க், ஜேகே சிமெண்ட், மாருதி சுசுகி, லிங்கன் எலக்ட்ரிக், நாம்டெக், வேகா, லோரியல், ஸ்னைடர் எலக்ட்ரிக், ஃபெஸ்டோ இந்தியா, ஆர்ட்டெமிஸ், மெடந்தா, சிக்னியா ஹெல்த்கேர் போன்ற 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன் இந்தியா ஸ்கில்ஸ் போட்டி நடத்தப்படுகிறது.

இந்தியா ஸ்கில்ஸ் 2024-ன் வெற்றியாளர்கள், சிறந்த தொழில்துறை பயிற்சியாளர்களின் உதவியுடன், செப்டம்பர் 2024-ல் பிரான்சின் லியோனில் நடைபெறவுள்ள உலகத் திறன் போட்டியில் பங்கேற்பார்கள். இதில் வாகனத் தொழில்நுட்பம் (ஆட்டோமொபைல்), விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிட்டி), இயந்திர மின்னணுவியல் (மெக்கட்ரானிக்ஸ்), நீர் தொழில்நுட்பம் (வாட்டர் டெக்னாலஜி) ஆகிய பிரிவுகளில் இந்தியா இந்த ஆண்டு பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

ANU/PLM/KV


(Release ID: 2020996) Visitor Counter : 66


Read this release in: English , Urdu , Hindi , Punjabi