பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தான்சானியாவின் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கான திட்ட மேலாண்மை மற்றும் சிக்கல்களை நிர்வகித்தல் குறித்த இரண்டு வார திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நல்லாட்சிக்கான தேசிய மையம் வெற்றிகரமாக நிறைவு செய்தது

Posted On: 17 MAY 2024 8:06PM by PIB Chennai

தான்சானியா பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கான  திட்ட மேலாண்மை மற்றும் சிக்கல்களை நிர்வகித்தல் (Risk Management) குறித்த திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம், புதுதில்லியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (NCGG) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி 2024 மே 6 அன்று தொடங்கி, 2024 மே 17 வரை நடைபெற்றது. வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தான்சானியா தேசிய சாலைகள் நிறுவனம், தான்சானியா எரிசக்தி அமைச்சகம், தான்சானியா திட்ட ஆணையம், தான்சானியா கட்டட நிறுவனம், தான்சானியா ரயில்வே கழகம் போன்ற தான்சானியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் அமைச்சகங்களைச் சேர்ந்த மொத்தம் 39 அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான திரு வி.ஸ்ரீனிவாஸ் தமது நிறைவுரையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த நடைமுறைகள் மற்றும் சிக்கல்கள் மேலாண்மை மதிப்பீடுகளில் இருந்து, தான்சானியா அதிகாரிகள் கற்றுக் கொண்டு, தங்கள் நாட்டில் வெற்றிகரமான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய தான்சானியா தூதுக்குழுவின் தலைவர் திரு ஜார்ஜ் நசவிகே நடாட்டா, அன்பான விருந்தோம்பலை வழங்கியதற்காகவும், அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கியதற்காகவும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக இந்தியா உருவாக்கி வரும் உலகப் புகழ்பெற்ற திட்டங்கள் குறித்து தாங்கள் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, அவற்றை தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார். 

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நல்லாட்சிக்கான தேசிய மையம், தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் செயல் ஆராய்ச்சி, ஆய்வுகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு உறுதிபூண்டுள்ளது. இந்நிறுவனத்தின் முயற்சிகள் 'வசுதைவ குடும்பகம்' எனப்படும் உலகம் ஒரே குடும்பம் என்ற இந்திய தத்துவத்துக்கு ஏற்ப அமைந்துள்ளன.  நட்பு நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும்  ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்களாதேஷ், மாலத்தீவுகள், கென்யா, தான்சானியா, துனிசியா, செஷல்ஸ், காம்பியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூடான், மியான்மர், எத்தியோப்பியா, எரித்ரியா மற்றும் கம்போடியா ஆகிய 17 நாடுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்சிஜிஜி) இதுவரை வெற்றிகரமாக பயிற்சி அளித்துள்ளது.

***

ANU/PLM/KV



(Release ID: 2020991) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Punjabi