பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு இந்திய ராணுவ அணி புறப்பட்டது
Posted On:
15 APR 2024 3:44PM by PIB Chennai
இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான 5-வது கூட்டு ராணுவப் பயிற்சியான டஸ்ட்லிக்கில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவ அணியினர் புறப்பட்டுச் சென்றனர். இன்று தொடங்கும் இந்தப் பயிற்சியை 2024 ஏப்ரல் 28 வரை உஸ்பெகிஸ்தான் குடியரசின் டெர்மெஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டஸ்ட்லிக் பயிற்சி, இந்தியாவிலும் மற்றும் உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்தர நிகழ்வாகும். முந்தையப் பயிற்சி 2023 பிப்ரவரி மாதம் பித்தோராகரில் (இந்தியா) நடத்தப்பட்டது.
60 வீரர்களைக் கொண்ட இந்திய அணியில் ராணுவத்தைச் சேர்ந்த 45 வீரர்கள், முக்கியமாக ஜாட் ரெஜிமென்ட்டின் ஒரு பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 வீரர்கள் உள்ளனர். உஸ்பெகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த சுமார் 100 வீரர்களைக் கொண்ட அணியினர் பங்கேற்கின்றனர்.
ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பது, மலைப்பாங்கான மற்றும் அரை நகர்ப்புற நிலப்பரப்பில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துவது டஸ்ட்லிக் பயிற்சியின் நோக்கமாகும். உயர் அளவிலான உடல் தகுதி, கூட்டுத் திட்டமிடல், கூட்டாக உத்திகள் வகுத்தல் பயிற்சி, சிறப்பு ஆயுத திறன்களின் அடிப்படைகள் ஆகியவற்றிலும் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும்.
கூட்டுக் கட்டளை மையத்தை உருவாக்குதல், புலனாய்வு மற்றும் கண்காணிப்பு மையத்தை நிறுவுதல், தரையிறங்கும் இடத்தைப் பாதுகாத்தல், சுற்றிவளைத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டமைப்புகளைத் தகர்த்தல் போன்றவையும் பயிற்சிகளில் அடங்கும்.
***
SM/SMB/RS/KV
(Release ID: 2017960)
Visitor Counter : 102