பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத் தளபதிகள் மாநாடு நிறைவடைந்தது: தற்போதைய மாற்றங்களுக்கு ஏற்ப உத்வேகத்துடன் செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது

Posted On: 04 APR 2024 1:34PM by PIB Chennai

ராணுவ தளபதிகள் மாநாடு நேற்று முன்தினம் (02-04-2023) புதுதில்லியில் நிறைவடைந்தது. நேரடியாகவும் காணொலி மூலமாகவும்  நடைபெற்ற இந்த  நிகழ்வு, 28 மார்ச் 2024 அன்று ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 2024 ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தற்போதைய மாற்றத்துக்கான நடவடிக்கைகள், திறன் மேம்பாடு, தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், செயல்பாட்டு தயார்நிலையை மேம்படுத்துதல், மனிதவளம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் (2024 ஏப்ரல் 2) இந்த மாநாட்டில் பங்கேற்று நிறைவுரையாற்றுகையில், ராணுவத்தின் மீதான தேசத்தின் நம்பிக்கையை எடுத்துரைத்தார்.  எல்லைகளை பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், நெருக்கடிகளின் போது நிர்வாகத்திற்கு உதவி அளிப்பதிலும் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பை அவர் பாராட்டினார். எதிர்கால சவால்களை கட்டமைப்புகளை மேம்படுத்தி, சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு  ராணுவ உயர் அதிகாரிகளைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து முக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ராணுவத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

படைவீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனில் அரசு அதிக அக்கறையுடன் செயல்படுவதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.செளத்ரி ஆகியோரும்  இந்தக்  கூட்டத்தில் உரையாற்றினர்.

***

ANU/SM/PLM/KPG/KV



(Release ID: 2017173) Visitor Counter : 59


Read this release in: English , Urdu , Hindi