இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
இந்தியாவின் நிகர பூஜ்ஜிய இலக்குகளை அடைய எரிசக்தி மாற்றங்கள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது
Posted On:
03 APR 2024 9:58PM by PIB Chennai
ஐ.ஐ.எம் அகமதாபாத் தயாரித்த "இந்தியாவிற்கான சாத்தியமான நிகர பூஜ்ஜியத்தை நோக்கி எரிசக்தி மாற்றங்களை ஒத்திசைத்தல்: அனைவருக்கும் மலிவான விலையில் சுத்தமான எரிசக்தி" என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இது, இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் நவம்பர் 2021 இல் இந்திய அணுசக்திக் கழகத்தின் (என்.பி.சி.ஐ.எல்) பகுதி நிதியுதவியுடன் (மூன்றில் ஒரு பங்கு) அனுமதிக்கப்பட்ட ஒரு ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த வெளியீட்டு விழா ஏப்ரல் 3, 2024 அன்று புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது.
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.சரஸ்வத், அணுசக்தித் துறை செயலாளரும், அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டர் ஏ.கே. மொகந்தி, என்.பி.சி.ஐ.எல் தலைமை மேலாண் இயக்குநர் சார்பில் இணைந்த புகழ்பெற்ற விஞ்ஞானியும், என்.பி.சி.ஐ.எல் இயக்குநருமான (மனித வளம்) திரு. பி. ஏ. சுரேஷ் பாபு, முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் அறிவியல் செயலாளர் டாக்டர் (திருமதி) பர்விந்தர் மைனி ஆகியோர் முன்னிலையில் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் இந்த அறிக்கையை வெளியிட்டார். ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் (ஹெச்.பி.என்.ஐ) வேந்தரும், ணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் அனில் ககோட்கர் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்தியாவுக்கான கார்பன் உமிழ்வின் நிகர பூஜ்ஜிய நிலையை எட்ட உதவும் எரிசக்தியை நோக்கிய தேவையான எரிசக்தி மாற்றம் குறித்த பகுப்பாய்வு ஆய்வை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட்டது. அதன்படி, நுகர்வோர் தரப்பில் மின்சாரத்தின் கட்டணத்தைக் குறைப்பதற்கான கடுமையான முறைகளுடன் விரிவான ஆய்வை நடத்துவதற்கும், நிகர பூஜ்ஜிய உமிழ்வை நோக்கமாகக் கொண்டு, அனைத்து மின் ஆதாரங்களுக்கும் உகந்த கலவையை உருவாக்குவதற்கும் இந்த ஆய்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் உள்ள திட்டக் குழு, பொது அமைப்புகள் குழுமத்தின் பேராசிரியர் அமித் கார்க் தலைமையில், நிலக்கரி, அணுசக்தி, சூரிய சக்தி, காற்று, உயிரி எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு மின் உற்பத்தி துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டமுதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்துள்ளது.
மனித மேம்பாட்டு குறியீட்டின் (ஹெச்.டி.ஐ) உயர் மதிப்பை அடைய இந்தியாவுக்கு எவ்வளவு ஆற்றல் தேவை; இதை அடைவதற்கான பாதைகள்; 2070 வரை (அறிவிக்கப்பட்ட நிகர பூஜ்ஜிய இலக்கு ஆண்டு) இதற்கான ஆற்றல் கலவை கணிப்புகள்; இறுதி பயனருக்கு மின்சார கட்டணம்; 2070 வரை கார்பன் உமிழ்வின் நிலை; 2070-ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜியத்தை நோக்கிய ஆற்றல் மாற்றங்களுக்கு தேவையான முதலீடுகள்; 2070-ஆம் ஆண்டில் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான ஆற்றல் மாற்றங்களில் பிற சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் ஒருங்கிணைப்பு, போன்ற இந்தியாவின் எரிசக்தி மாற்றம் தொடர்பான முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த அறிக்கை முயற்சிக்கிறது;
அறிக்கையை இங்கே அணுகவும்: https://psa.gov.in/CMS/web/sites/default/files/publication/ESN%20Report-2024_New-21032024.pdf
***
SM/BR/KV
(Release ID: 2017139)