தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

"நாளைய வேளாண்மை: பொருள்களின் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் டிஜிட்டல் விவசாயத்தை மேம்படுத்துதல்" என்ற தலைப்பிலான பயிலரங்கு புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது

Posted On: 17 MAR 2024 7:34PM by PIB Chennai

சர்வதேச தொலைத்தொடர்பு கூட்டமைப்பான ஐடியு, ஐநா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் (FAO) இணைந்து "நாளைய வேளாண்மை: பொருள்களின் இணையம் (Internet of Things -IoT) மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் டிஜிட்டல் விவசாயத்தை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வை மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் (டிஓடி) மற்றும் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) ஆகியவை நடத்துகின்றன.

இந்த பயிலரங்கு நாளை (18 மார்ச் 2024) தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நடைபெற உள்ளது. பயிலரங்கைத் தொடர்ந்து, டிஜிட்டல் விவசாயத்திற்கான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பொருட்களின் இணையம் குறித்த  குழுவின் 9 வது கூட்டம் நாளை மறுநாள் (19 மார்ச் 2024) அன்று  நடைபெறவுள்ளது.

சர்வதேச வல்லுநர்கள் உட்பட சுமார் 200 பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிகரித்து வரும் உலக மக்கள்தொகை மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவை பாரம்பரிய விவசாய நடைமுறைகளுக்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. எனவே நிலையான உணவு உற்பத்திக்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது இன்றியமையாததாகிறது.  உற்பத்தி, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, சந்தைப்படுத்தல் உட்பட விவசாயத்தின் முழு நடைமுறைகளிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இந்த பயிலரங்கு ஆராயும்.

***

ANU/AD/PLM/DL



(Release ID: 2015327) Visitor Counter : 58


Read this release in: English , Urdu , Hindi , Telugu