பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
12 MAR 2024 4:28PM by PIB Chennai
பாரத் மாதா கி – ஜே!
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனதுநண்பர்கள் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, திரு கஜேந்திர ஷெகாவத் அவர்களே, திரு கைலாஷ் சவுத்ரி அவர்களே, பொதுப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பேராசிரியர் திரு அஜய் சூட் அவர்களே, முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அவர்களே, விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அவர்களே, கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் அவர்களே, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அவர்களே, மூத்த அதிகாரிகளே, முப்படைகளின் துணிச்சலான வீரர்களே, பொக்ரானில் கூடியிருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!
இன்று, நமது பொக்ரான் மீண்டும் ஒருமுறை பாரதத்தின் தற்சார்பு, தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதைக்கு சாட்சியாக நிற்கிறது. இந்த பொக்ரான்தான் பாரதத்தின் அணு சக்தியைக் கண்டது, இங்குதான் சுதேசமயமாக்கல் மூலம் அதிகாரமளித்தலை நாம் காண்கிறோம். இன்று ஒட்டுமொத்த தேசமும் ராஜஸ்தானில் உள்ள வீர பூமியிலிருந்து பாரதத்தின் வலிமையின் திருவிழாவைக் கொண்டாடுகிறது, ஆனால் அதன் எதிரொலிகள் பாரதத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் எதிரொலிக்கின்றன.
நண்பர்களே,
எம்.ஐ.ஆர்.வி நவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணையை பாரதம் நேற்று தான் வெற்றிகரமாக சோதனை செய்தது. உலகில் வெகு சில நாடுகளே இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், நவீன திறனையும் கொண்டுள்ளன. இது, பாதுகாப்புத் துறையில் தற்சார்பை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
நண்பர்களே,
'தற்சார்பு இந்தியா' இல்லாமல், ' வளர்ச்சி அடைந்த இந்தியா' என்ற பார்வை சாத்தியமில்லை. பாரதம் முன்னேற வேண்டுமானால் பிறரைச் சார்ந்திருப்பதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். எனவே, இன்று சமையல் எண்ணெய் முதல் நவீன போர் விமானங்கள் வரை ஒவ்வொரு துறையிலும் பாரதம் தற்சார்பை வலியுறுத்தி வருகிறது. அந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியே இன்றைய நிகழ்வு. இன்று மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றி நம் முன்னால் தெளிவாகத் தெரிகிறது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் முதல் தகவல் தொடர்பு சாதனங்கள், சைபர் மற்றும் விண்வெளி வரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்டதை நாம் அனுபவிக்கிறோம் – இதுதான் 'பாரதத்தின் சக்தி'.
நண்பர்களே,
கடந்த 10 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறையில் நாட்டை தற்சார்புடையதாக மாற்ற ஒன்றன் பின் ஒன்றாக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நாங்கள் கொள்கை மட்டத்தில் மேம்பட்டுள்ளோம், சீர்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளோம், தனியார் துறையை ஈடுபடுத்தியுள்ளோம், எம்.எஸ்.எம்.இ.க்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்துள்ளோம். இன்று, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் இதுவரை 7,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இன்று, ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ளது. இன்று நான் முப்படைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஆயுதப்படைகள் நூற்றுக்கணக்கான ஆயுதங்களின் பட்டியலைத் தொகுத்து, அவற்றை இனி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதில்லை என்று முடிவு செய்தன. இந்த ஆயுதங்களுக்கான இந்திய சூழலியலை நமது ஆயுதப்படைகள் ஆதரித்தன. நமது ராணுவப் படைகளுக்காக இந்திய நிறுவனங்களிடமிருந்து நூற்றுக்கணக்கான ராணுவ உபகரணங்கள் வாங்கப்படுகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 10 ஆண்டுகளில், உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த 10 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி இரு மடங்கிற்கும் மேலாக, 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
நாட்டின் பொருளாதார பலம் அதிகரிக்கும் போது படையின் பலமும் அதிகரிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இடைவிடாத மற்றும் நேர்மையான முயற்சிகள் மூலம், நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளோம், எனவே நமது ராணுவத் திறனும் அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக நாம் மாறும் போது, பாரதத்தின் ராணுவத் திறனும் புதிய உச்சங்களை எட்டும். பாரதத்தை மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதில் ராஜஸ்தான் முக்கிய பங்கு வகிக்கும். பாரத சக்தியை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக உங்கள் அனைவரையும் நான் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.
மிகவும் நன்றி.
***
PKV/BR/KV
(Release ID: 2014491)
Visitor Counter : 85
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam