சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கென்யாவின் நைரோபியில் உணவு சுகாதாரம் குறித்த கோடக்ஸ் குழுவின் 54-வது அமர்வில், உணவுத் தெருக்களை நவீன மயமாக்குதலுக்கான இந்தியாவின் தர நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது

Posted On: 13 MAR 2024 1:58PM by PIB Chennai

கென்யாவின் நைரோபியில் மார்ச் 10 அன்று, உணவு சுகாதாரம் குறித்த கோடக்ஸ் குழுவின் 54-வது அமர்வுக்கு முந்தைய கூட்டத்தில் இந்தியா சமீபத்தில் வெளியிட்ட உணவுத் தெருக்களை நவீன மயமாக்குவதற்கான தர செயல்பாட்டு நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. 54-வது அமர்வின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் ஒன்றான உணவுக்கான பாரம்பரிய சந்தைகளில் உணவு சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான முன்மொழியப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த  விவாதம் நடைபெற்றது.

மற்ற முக்கியமான நிகழ்ச்சி நிரல்களில், "புதிய இலை காய்கறிகள் மற்றும் முளைகட்டிய தானியங்களில் நச்சு உற்பத்தி செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்" மற்றும் "மீன் மற்றும் மீன் பொருட்கள், பால் மற்றும் பால் தயாரிப்புகளில் உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் நீரின் பாதுகாப்பான பயன்பாடு மற்றும் மறு பயன்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள்" ஆகியவை விவாதிக்கப்படும்.

உணவு சுகாதாரத்திற்கான கோடக்ஸ் குழுவின் 54-வது அமர்வு, மார்ச் 11 முதல் மார்ச் 15 வரை நடைபெறுகிறது. அமெரிக்க அரசால் நடத்தப்படும் இந்த அமர்வு கென்யாவில் முதல் முறையாக கூடுகிறது.

இந்திய பிரதிநிதிகள் குழுவில் இந்தியாவின் தேசிய கோடக்ஸ் தொடர்பு இடமான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆலோசகர் டாக்டர் சத்யன் குமார் பாண்டா தலைமை தாங்குகிறார். ஆசியாவிற்கான ஒருங்கிணைப்புக் குழு, அமெரிக்க தூதுக்குழு, உணவு சுகாதாரத்திற்கான கோடக்ஸ் குழுவின் தலைவர் ஆகியோருடன் அமர்வுக்கு முந்தைய கூட்டத்தில் அவர் பங்கேற்றார். தர நிர்ணய ஆணையம் வடிவமைத்த தர செயல்பாட்டு நடைமுறைகளை கோடக்ஸ் குழுத்  தலைவர் டாக்டர் ஈவ்லின் எம்பாண்டி, ஆசியாவிற்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் டாக்டர் ஜிங் தியான் ஆகியோருக்கு வழங்கினார்.

அடுத்த சில நாட்களில் விவாதங்கள் தொடரும் நிலையில், உணவுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் உலகத் தரத்தை மேம்படுத்துவதில் இந்திய பிரதிநிதிகள் உறுதியுடன் பணியாற்றுவதுடன் அனைவரின் நலனுக்காக சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

***

PKV/RS/KV



(Release ID: 2014148) Visitor Counter : 81


Read this release in: Urdu , English , Marathi , Hindi