ஜல்சக்தி அமைச்சகம்
நீர்வள இயக்கம்; மழை நீர் சேகரிப்பு 2024 என்ற பிரசாரத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார்
Posted On:
10 MAR 2024 2:34PM by PIB Chennai
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் "நீர்வள இயக்கம்; மழை நீர் சேகரிப்பு 2024" பிரச்சாரத்தின் ஐந்தாவது பதிப்பை 2024 மார்ச் 9 அன்று புதுதில்லியில் உள்ள புது தில்லி முனிசிபல் கமிட்டி மாநாட்டு மையத்தில் தொடங்கி வைத்தார்.
மகளிர் சக்தியின் மூலம் குடிநீர் சக்தி என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த பிரச்சாரம், நீர் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் பெண்களின் ஒருங்கிணைந்த பங்கை வலியுறுத்துகிறது.
தேசிய நீர் இயக்கம், நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையின் கீழ் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்த இயக்கம் நடைபெற்று வருகிறது.
"ஜல் சக்தி அபியான் 2019 முதல் 2023 வரை - நிலையான நீர் எதிர்காலத்திற்கான பயணம்" மற்றும் "ஜல் ஜீவன் மிஷனின் முப்பட்டகத்தின் மூலம் பெண்கள் சக்தியின் 101 கண்ணோட்டம்:" என்ற இரண்டு புத்தகங்களையும் மத்திய அமைச்சர் மெய்நிகர் முறையில் வெளியிட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், நீர் சேமிப்பு மற்றும் நீடித்த மேலாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், நமது வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தில் நீரின் இன்றியமையாத பங்கை எடுத்துரைத்தார்.
நீர்வள இயக்கம்; மழை நீர் சேகரிப்பு 2024 என்பது நீர் சேமிப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும் என்றும், இந்த முயற்சிகளில் 'மகளிர் சக்தி' முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தேசத்திற்கு அதிகாரம் அளிக்கும் என்பது எங்களது உறுதியான நம்பிக்கை என்று அவர் கூறினார். நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் பொறுப்பை தங்கள் தோள்களில் ஏற்றுக்கொண்ட நாட்டின் பெண்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.
***
ANU/AD/BS/DL
(Release ID: 2013283)
Visitor Counter : 147