நிலக்கரி அமைச்சகம்
தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் நிலக்கரி வாயுவாக்கம்
प्रविष्टि तिथि:
06 MAR 2024 2:48PM by PIB Chennai
மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம், நிலக்கரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், உபரி விநியோகத்தை உறுதி செய்வதற்கும் அதன் முயற்சிகளில் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்து கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அது அங்கீகரிக்கிறது. சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் சக்தி போன்ற தூய்மையான எரிசக்தி மாற்றுகளை நோக்கி தனது கவனத்தை அது மாற்றி வருகிறது. இந்தவகையில், தூய்மையான நிலக்கரித் தொழில்நுட்பத்தை, குறிப்பாக நிலக்கரி வாயுமயமாக்கலை ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ள அமைச்சகம், நெகிழ்திறன் மற்றும் நீடித்த எரிசக்தி சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான அரசின் தொலைநோக்குடன் ஒத்துப்போகிறது. இந்தியாவின் எரிசக்தி அமைப்பில் நிலக்கரி முக்கியப் பங்கு வகிக்கிறது. மொத்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 70% பங்கை அது அளிக்கிறது. எஃகு, கடற்பாசி இரும்பு, சிமெண்ட், காகிதம் போன்ற பல்வேறு தொழில்களில் இது ஒரு முக்கியமான உள்ளீடாகும். 'மேக் இன் இந்தியா' போன்ற முன்முயற்சிகள் காரணமாக, அமைச்சகம் அதிகரித்த தேவை மற்றும் அதிகப் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை எதிர்பார்க்கிறது.
தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த, நிலக்கரி வாயுமயமாக்கல் இயக்கம் உட்பட பல தூய்மையான நிலக்கரி முயற்சிகளை அரசு தொடங்கியுள்ளது. மேற்பரப்பு நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்கள் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம், நிலக்கரிச் சுரங்கங்களில் மேற்பரப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்களை முன்னெடுப்பதில் கூட்டு முயற்சிகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அக்டோபர் 2022-ல், பாரத் மிகுமின் நிறுவனத்துடன், கோல் இந்திய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அத்துடன், இந்திய எண்ணெய் கழகம், இந்திய வாயு ஆணையம் ஆகியவற்றுடனும் கோல் இந்தியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையால் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்களை ஊக்குவிக்க ஒரு நிதி உதவித் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டங்களுக்கு ஊக்கத்தொகைகளுக்காக ரூ.8500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாயுமயமாக்கல் திட்டங்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப நம்பகத்தன்மையை நிரூபிப்பது, கீழ்நிலை தயாரிப்புகளுக்கான சந்தைகளை விரைவுபடுத்துவது, நிலக்கரிக்கான பொருளாதாரத்தில் கூடுதல் மதிப்பு சங்கிலியை உருவாக்குவது ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2011882
***
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2011905)
आगंतुक पटल : 149