ஜவுளித்துறை அமைச்சகம்
பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்-ஜவுளித் துறையில் இந்தியாவின் தனித்துவமான திறன்களை முன்னிலைப்படுத்தும் சிறந்த தளமாக பாரத் டெக்ஸ் 2024 அமையும் என பிரதமர் கருத்து
கஸ்தூரி பருத்தி இந்தியாவின் சொந்த அடையாளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்: பிரதமர்
கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், கண்காட்சியாளர்களை சந்தித்தார்
பாரத் டெக்ஸ் 2024, ஜவுளித்துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும்: ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்
2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்ட உள்ளூர் ஜவுளி விநியோக சங்கிலிகளை வலுப்படுத்த வேண்டும்: திரு பியூஷ் கோயல்
Posted On:
26 FEB 2024 3:53PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுமார் 40,000 பார்வையாளர்கள் வரக்கூடிய இந்த நிகழ்வு அனைவருக்கும் ஒரு சிறந்த தளத்தை வழங்கும் என்றார்.
இந்தியா முழுவதிலுமிருந்து வரும் எண்ணற்ற ஜவுளி பாரம்பரியங்களை உள்ளடக்கிய ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் இந்தியாவின் திறன்கள் குறித்துப் பேசிய பிரதமர், பருத்தி விவசாயிகளுக்கு அரசு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், அவர்களிடமிருந்து பருத்தியை வாங்குவதாகவும் கூறினார். அரசால் தொடங்கப்பட்ட கஸ்தூரி பருத்தி, உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதில் ஒரு பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். சணல் மற்றும் பட்டுத் துறை மேம்பாட்டுக்கான அரசின் நடவடிக்கைகளையும் பிரதமர் குறிப்பிட்டார்.
பல்வேறு மாநிலங்களில் ஏழு பிரதமரின் மித்ரா பூங்காக்களை உருவாக்கும் அரசின் விரிவான திட்டங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒட்டுமொத்த ஜவுளித் துறைக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.
ஜவுளித் துறைகளில் கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஆடை உற்பத்தியாளர்களில் 10 பேரில் 7 பேர் பெண்கள் என்றும், கைத்தறித் துறையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது என்றும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், காதியை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான வலுவான அடித்தளமாக மாற்றியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், உலகளாவிய ஜவுளிக் கண்காட்சி நாட்டிலேயே முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார். இது பண்ணையிலிருந்து வெளிநாட்டு சந்தைகள் வரை முழு ஜவுளி மதிப்பு சங்கிலியையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார். உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், ஜவுளித் துறையில் நமது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற திறன், வேகம் மற்றும் அளவு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். வலுவான விநியோகச் சங்கிலிகள் 2030-ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜவுளி ஏற்றுமதியுடன் 250 பில்லியன் டாலர் உற்பத்தி இலக்கை அடைய உதவும் என்று திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், ஜவுளித்துறை செயலாளர் திருமதி ரச்னா ஷா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-------------
(Release ID: 2009087)
ANU/AD/PLM/RS/ KRS
(Release ID: 2009246)
Visitor Counter : 116