குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நிர்வாகத்திற்கு வழிகாட்டுவதில் சட்டமன்றம் தீர்க்கமான பங்கை வகிக்க வேண்டும் - மிசோரம் சட்டப்பேரவையில் குடியரசுத் துணைத் தலைவர் உரை

Posted On: 26 FEB 2024 3:24PM by PIB Chennai

நிர்வாகத் துறைக்கு வழிகாட்டுவதிலும், நாடு சரியான திசையில் முன்னேறுவதை உறுதி செய்வதிலும் சட்டமன்றங்கள் தீர்மானகரமான பங்கை ஆற்ற வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மிசோரம் சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர், மிசோரம் மாநிலம் நம்பிக்கை மற்றும் வாய்ப்புகள் நிறைந்தது என்று கூறினார். இந்த  மாநில இளைஞர்கள் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தைப் பாராட்டிய அவர், இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். சபையின் செயல்திறன் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய சூழல் அமைப்பு மாநிலத்திற்கும் தேசத்திற்கும் பயனளிக்கும் என்று தெரிவித்தார்.

முதல் முறையாக மிசோரம் சட்டமன்றத்தில் மூன்று பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நாடு வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் ஈடுபாடு, கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தின் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் எடுத்துரைத்தார்.

கடந்த பத்தாண்டுகள் வடகிழக்கு மாநிலங்களின் பொற்காலம் என்று கூறிய அவர், இந்தக் காலகட்டத்தில் இப்பகுதி முன்னெப்போதும் இல்லாத, அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

 

மிசோரம் அழகு மற்றும் கலாச்சார செழுமை மிகுந்த மாநிலம் என்று கூறிய அவர், இம்மாநிலம் சுற்றுலாப் பயணிகளின் கனவு இலக்காகும் என்றார். அரசின் மேம்பாட்டு நடவடிக்கைகள் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறினார்.

*********

(Release ID: 2009061)

ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 2009193) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi , Bengali-TR