கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
வாரணாசியில் பல்வேறு பசுமை நீர்வழிப்பாதை திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தேசிய நீர் வழிகள் ஆணையம் மூலம் கொச்சி கப்பல் கட்டும் தளம் கட்டிய இரண்டு மின்சார படகுகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
வாரணாசியில் நான்கு சமுதாய படகுத்துறைகளை தொடங்கி வைத்த பிரதமர், மதுரா மற்றும் பிரயாக்ராஜில் 13 சமுதாய படகுத்துறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்
Posted On:
23 FEB 2024 6:17PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI) மூலம் கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் (CSL) தயாரித்த இரண்டு மின்சார படகுகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தலா 50 பயணிகள் அமரும் திறன் கொண்ட இந்த அதிநவீன படகுகள், வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரிகள் மூலம் இயக்கப்படுகின்றன. இந்த பசுமைக் படகுகள் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும்.
இந்தியாவில் நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்து, நெரிசலைக் குறைப்பதற்கும், பெருநகரங்களில் மாசுபாட்டைக் குறைப்பதற்கும் ஒரு நிலையான தீர்வாக மாறி வருகிறது. நீர்வழிகளை மேம்படுத்துதல் மற்றும் நவீன படகுகளை அறிமுகப்படுத்துதல் போன்ற முன்முயற்சிகளுடன், நகரங்களில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயண தேர்வுகளை ஊக்குவிப்பதற்கும் நீர் வழிப் போக்குவரத்து பயன்படுகிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசியில் நான்கு சமூக படகுத்துறைகளை திறந்துயும் வைத்தார். உத்தரப்பிரதேசத்தில் மதுரா மற்றும் பிரயாக்ராஜில் 13 சமூக படகுத்துறைகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தால் செயல்படுத்தப்படும் ஜல் மார்க் விகாஸ் திட்டம் (JMVP) உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹால்டியா வரை 1390 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நீர்வழித்தட்டத்தில் போக்குவரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக 60 சமூக படகுத்துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிற்சாலைகள் அருகிலுள்ள சந்தைகளை எளிதாக அணுகுவதை இந்த சமுதாய படகுத்துறைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இவை சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் உள்நாட்டுப் போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்துகின்றன.
கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டத்தின் (எம்ஐவி) ஒரு பகுதியாக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் பங்கை 2030-க்குள் 5 சதவீதமாக உயர்த்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. கடல்சார் அமிர்த காலத் தொலைநோக்குத் திட்டம் 2047-ன் கீழ், கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 46 முன்முயற்சிகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
Release ID: 2008462
AD/PLM/KRS
(Release ID: 2008516)
Visitor Counter : 133