வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு கடல் வழியாக வாழைப்பழங்களின் ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது
Posted On:
18 FEB 2024 5:56PM by PIB Chennai
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏபிஇடிஏ - APEDA), ஐரோப்பிய யூனியன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் மும்பையைச் சேர்ந்த குருகிருபா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு வாழைப்பழங்களை கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்கு வசதி செய்துள்ளது.
20 மெட்ரிக் டன் (1540 பெட்டிகள்) வாழைப்பழங்களின் தொகுப்பை, 17 பிப்ரவரி 2024 அன்று மகாராஷ்டிராவிலிருந்து ஏபிஇடிஏ தலைவர் திரு அபிஷேக் தேவ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். புதிய பொருட்களை புதிய பகுதிகளுக்கு அனுப்புவதில் புதிய முறைகளைப் பயன்படுத்துமாறு ஏற்றுமதியாளர்களை ஏபிஇடிஏ தலைவர் ஊக்குவித்தார். பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் ஏபிஇடிஏ-வின் நிதி உதவித் திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
அண்மைக் காலத்தில், இந்தியாவிலிருந்து வெப்பமண்டல பழங்களை கொள்முதல் செய்வதில் ரஷ்யா மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. அவற்றில் வாழைப்பழமும் ஒன்றாகும். இது ரஷ்யாவின் முக்கிய விவசாய இறக்குமதிப் பொருளாகும்.
ஈரான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், உஸ்பெகிஸ்தான், சவுதி அரேபியா, நேபாளம், கத்தார், குவைத், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்திய வாழைப்பழங்களின் முக்கிய ஏற்றுமதி இடங்களாகும். இதுதவிர, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, சீனா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு ஏராளமான ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்குகின்றன.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான ஏபிஇடிஏ-வின் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளரான குருகிருபா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இந்த சரக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. குருகிருபா நிறுவனம் ஆந்திர மாநில விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாழைப்பழங்களை கொள்முதல் செய்தது. அறுவடைக்குப் பிறகு, வாழைப்பழம் மகாராஷ்டிராவில் உள்ள ஏபிஇடிஏ-வின் அங்கீகரிக்கப்பட்ட நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அது தரம் பிரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொள்கலன்களில் அடைக்கப்பட்டது. இந்த கொள்கலன் ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வாழை ஒரு முக்கிய தோட்டக்கலை உற்பத்தியாகும். ஆந்திர மாநிலம் இந்தியாவில் அதிக வாழை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை உள்ளன. 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் வாழை உற்பத்தியில் இந்த ஐந்து மாநிலங்களும் கூட்டாக சுமார் 67 சதவீத பங்களிப்பை வழங்கி இருந்தன.
வாழைப்பழங்களின் மிகப்பெரிய உலகளாவிய உற்பத்தியாளராக இந்தியா இருந்தபோதிலும், இதுவரை இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவில் இல்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து வாழை ஏற்றுமதி 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதையும், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்யும்.
*******
ANU/AD/PLM/DL
(Release ID: 2006925)
Visitor Counter : 237