வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஜெர்மனியின் நியூரம்பெர்க் சர்வதேச பொம்மை கண்காட்சியில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய விற்பனை வாய்ப்புகள் கிடைத்தன

Posted On: 05 FEB 2024 7:07PM by PIB Chennai

2024, ஜனவரி 30, முதல் பிப்ரவரி 3, வரை ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் நடைபெற்ற ஐந்து நாள் சர்வதேச பொம்மைக் கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பொம்மை தயாரிப்பாளர்கள், உயர்தர தயாரிப்புகளை காட்சிப்படுத்தியதால் 10 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் விற்பனை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். கட்டாய தர விதிமுறைகள், சுங்க வரி அதிகரிப்பு, பொம்மைகள் மீதான தேசிய செயல் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் உயர்தர தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உதவியுள்ளன. அவை சர்வதேச அரங்கில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன என்பதை இந்திய பொம்மைத் தொழில் எடுத்துக்காட்டுகிறது. இந்திய பொம்மைத் துறை ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சியடைந்து உலகளவில் போட்டியிடுகிறது. கண்காட்சியில் மிகவும் பிரபலமான பிரிவுகளில் மர பொம்மைகள், கல்வி கற்றல் பொம்மைகள் ஆகியவை இடம் பெற்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வாங்குபவர்கள் தங்கள் தயாரிப்புகளில் ஆர்வம் காட்டி அதிக எண்ணிக்கையிலான கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொம்மை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.   இந்த ஆண்டு நடைபெற்றக் கண்காட்சியில்  இந்தியாவிலிருந்து 55-க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

'மேட் இன் இந்தியா' பொம்மைகளுக்கு வளர்ந்து வரும் சர்வதேச அங்கீகாரம், ஏற்றுமதி அதிகரிப்புக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2014-15-ம் நிதியாண்டில் 332.55 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த பொம்மைகளின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 52% அளவிற்கு கணிசமான குறைவு ஏற்பட்டு 2022-23ம்  நிதியாண்டில் 158.7 மில்லியன் அமெரிக்க டாலராகவும் இருந்தது. பொம்மைகள் ஏற்றுமதியைப் பொறுத்தவரை 2014-15-ம் நிதியாண்டில் 96.17 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2022-23-ம் நிதியாண்டில் 325.72 மில்லியன் அமெரிக்க டாலராக 239% அளவிற்கு அதிகரித்துள்ளது.

இக்கண்காட்சியில் 65-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.

----

(Release ID: 2002761

ANU/SM/IR/KPG/KRS

 



(Release ID: 2002804) Visitor Counter : 70


Read this release in: English , Urdu , Hindi , Marathi