ஆயுஷ்
azadi ka amrit mahotsav g20-india-2023

தில்லியில் நான்கு நாட்கள் நடைபெற்ற தேசிய ஆரோக்கிய கண்காட்சி இன்று நிறைவடைந்தது - கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆயுஷ் அமைச்சகம் பொது சுகாதார சேவையில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறது: மத்திய இணை அமைச்சர் திரு முஞ்சப்பாரா மகேந்திரபாய்

Posted On: 04 FEB 2024 5:49PM by PIB Chennai

தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 4 நாட்கள் நடைபெற்ற தேசிய ஆரோக்கிய கண்காட்சி இன்று (04-02-2024) நிறைவடைந்தது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு முஞ்சப்பாரா மகேந்திரபாய் கலந்து கொண்டார்.

ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் நன்மைகளை வெளிப்படுத்துதல், விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் முழுமையான சுகாதார மற்றும் ஆரோக்கிய நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்குவித்தல், பயிற்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவித்தல், ஆயுஷ் அமைப்புகள் தொடர்பான தயாரிப்புகளின் வணிகத்தை ஊக்குவித்தல் ஆகிய பல அம்சங்களை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு முஞ்சப்பாரா மகேந்திரபாய், தேசிய ஆரோக்கிய கண்காட்சி என்பது ஆயுஷின் அனைத்து அம்சங்களிலும் ஆழமாக கவனம் செலுத்தும் நிகழ்வாகும் என்றார். ஆயுஷின் பல்வேறு அம்சங்கள் குறித்த குழு விவாதங்கள் அதற்கு கூடுதல் மதிப்பு சேர்த்துள்ளன என்று அவர் கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு, ஒட்டுமொத்த அணுகுமுறையை மேற்கொண்டு, ஆயுஷ் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் மீது கவனம் செலுத்தி, பொது சுகாதார சேவையை வழங்குவதில் முன்னுரிமை அளித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். நவீன சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த சுகாதாரம் குறித்து ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறது என்று இணையமைச்சர் திரு முஞ்சப்பாரா மகேந்திரபாய் குறிப்பிட்டார்.

2024 பிப்ரவரி 1 முதல் 2024 பிப்ரவரி 4 வரை புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் ஸ்ரீ புரண் சந்திர குப்தா ஸ்மாரக் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ஆரோக்கிய கண்காட்சி, ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் வளமான மருத்துவ மரபுகளின் ஆற்றல்மிக்க ஒருங்கிணைப்பாக அமைந்தது. இது பாரம்பரிய மருத்துவ முறையைக் கொண்டாடுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும், முழுமையான நல்வாழ்வை வலியுறுத்துவதற்கும் ஒரு தளமாக அமைந்தது.

இந்த நிகழ்வில் ஆரோக்கியம் குறித்த பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கண்காட்சிகள், இலவச சுகாதார ஆலோசனைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.

----

 

ANU/PKV/PLM/DL



(Release ID: 2002440) Visitor Counter : 76


Read this release in: English , Urdu , Hindi