ஜவுளித்துறை அமைச்சகம்
பாரத் டெக்ஸ் 2024-ல் பங்கேற்க ஆந்திராவில் உள்ள ஜவுளித் துறையினர் தீவிரம்
Posted On:
29 JAN 2024 6:38PM by PIB Chennai
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் கொள்கை வழிமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆந்திரப்பிரதேச அரசுடன் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த ஒருநாள் தேசிய மாநாட்டை ஜவுளி அமைச்சகம் இன்று ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கம் ஆதரவளித்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு ராஜீவ் சக்சேனா, தொழில்நுட்ப ஜவுளித்துறையின் பல்வேறு பயன்பாடுகள் குறித்து விளக்கியதுடன், தொழில்நுட்ப ஜவுளித்துறையில் எதிர்கால சந்தைகள் குறித்தும் விளக்கினார். எதிர்வரும் பாரத் டெக்ஸ் 2024 என்ற மாபெரும் நிகழ்வில் பங்கேற்க தொழிற்சாலைகளை அவர் வலியுறுத்தினார்.
சுழற்சிப் பொருளாதாரத்திற்கான உத்திகள், தொழில்நுட்ப ஜவுளிகள், வேளாண் ஜவுளிகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பயன்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஜவுளிகளின் போக்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்றன. ஆந்திரப்பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆந்திரப்பிரதேச அரசின் தொழில்கள், உள்கட்டமைப்பு, முதலீடு, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு ஜி. அமர்நாத், தொழில்நுட்ப ஜவுளித் துறையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், நேரடி அந்நிய முதலீடு உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளித் துறையில் முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்களை வரவேற்றார். கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் வளர்ச்சிக்காக மாநில அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் குறித்தும், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்தும் ஆந்திரப் பிரதேச அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறையின் முதன்மைச் செயலாளர் திருமதி கே. சுனிதா எடுத்துரைத்தார்.
-----
(Release ID: 2000420)
ANU/SM/IR/KPG/KRS
(Release ID: 2000445)
Visitor Counter : 99