பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய எரிசக்தி வாரம்' 24-ல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 எரிசக்தித்துறை அமைச்சர்கள், 35,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், 900-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது: அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி

Posted On: 29 JAN 2024 4:16PM by PIB Chennai

எரிசக்தி துறையில் இந்தியாவின் வளர்ச்சியைக் காட்சிப்படுத்தவும், எரிசக்தித் துறையில் மேலும் வளர்ச்சி ஏற்படவும், அதற்கான  தளத்தை வழங்கவும் இந்திய எரிசக்தி வாரம் ஒரு பொன்னான வாய்ப்பை அளிக்கும்" என்று பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

2024 பிப்ரவரி 6 முதல் 9 வரை கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய எரிசக்தி வாரத்தின் 2-வது தொகுப்பின் முக்கிய அம்சங்கள் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர், இந்திய எரிசக்தி வாரம்-24-ல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 எரிசக்தித்துறை அமைச்சர்கள், 35,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 900-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். "இம்முறை கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 6 நாடுகளின் அரங்குகள் இடம் பெறுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய எரிசக்தி வாரம் 2024-ன் போது, எரிசக்தித் துறையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்துவதற்காக 300-க்கும் அதிகமான  கண்காட்சியாளர்களுடன் சிறப்பு மேக் இன் இந்தியா அரங்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். உள்நாட்டு, சர்வதேச பங்கேற்பாளர்களுடன், உள்நாட்டு, சர்வதேச சந்தைகளுக்கு தங்கள் திறன்களை நிரூபிக்க இது ஒரு இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

இந்திய எரிசக்தி வாரத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுதான் ஆகிறது என்றும், சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட அனைவரிடமிருந்தும் நாம் காணும் உற்சாகம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

தனியார் நிதிப்பங்களிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதைக் குறிப்பிட்ட திரு பூரி, தனியார் நிறுவனங்களின் மொத்த வருவாயில் 81% அதிகரிப்பு மற்றும் தனியார் நிதிப்பங்களிப்புகளின் எண்ணிக்கையில் 44% அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்தார்.  இதன் விளைவாக கடந்த ஆண்டை விட தனியார் நிதிப்பங்களிப்பு வருவாய் 3 மடங்கு அதிகமாக உள்ளது என்று திரு பூரி தெரிவித்தார்.

-----

(Release ID: 2000352)

ANU/SMB/IR/KPG/KRS


(Release ID: 2000438) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Hindi