பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கான்பூர் விமானப்படை தளத்தில் 8 வது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டங்கள்; பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை நடக்கிறது

Posted On: 13 JAN 2024 12:02PM by PIB Chennai

2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி கான்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் முன்னாள் படைவீரர்கள் பேரணியுடன் கூடிய 8 வது ஆயுதப்படை முன்னாள் வீரர்கள் தின கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குகிறார். போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து, போரில் உயிர் நீத்தவர்களின் உன்னதமான தியாகம் மற்றும் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செய்த சேவைக்கும் மரியாதை செலுத்துகிறார்.

இந்த ஆண்டு, ஸ்ரீநகர், பதான்கோட், தில்லி, கான்பூர், ஆல்வார், ஜோத்பூர், கவுகாத்தி, மும்பை, செகந்திராபாத் மற்றும் கொச்சி ஆகிய நாடு முழுவதும் 10 இடங்களில் முப்படைகளும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றன.

செகந்திராபாத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் தலைமை தாங்குகிறார். புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் படைவீரர் தினம் கொண்டாடப்படும் நிகழ்வுகளை  அதிகரிப்பதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள் / துணைநிலை ஆளுநர்கள் இந்த நாளைக் கொண்டாடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வின் போது, முன்னாள் படைவீரர்களுக்கு பதக்கம் / நினைவுப்பரிசு / அங்கீகார சான்றிதழ் போன்றவை வழங்கப்படும். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னாள் படைவீரர்களை நினைவுகூரும் 'வி ஃபார் வெட்டரன்ஸ்' கீதமும் இசைக்கப்படும்.

1947 ஆம் ஆண்டு போரில் படைகளை வெற்றிக்கு வழிநடத்திய இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா 1953 ஆம் ஆண்டில் ஜனவரி 14ஆம் தேதி முறைப்படி ஓய்வு பெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

 

இந்த நாள் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் இதுபோன்ற கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் இது நினைவுகூரப்படுகிறது.

*****

ANU/PKV/BS/DL


(Release ID: 1995852) Visitor Counter : 139


Read this release in: English , Urdu , Hindi