பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மின் ஆளுகை குறித்த பிராந்திய மாநாடு குவஹாத்தியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
Posted On:
10 JAN 2024 3:40PM by PIB Chennai
மின் ஆளுகை குறித்த இரண்டு நாள் பிராந்திய மாநாடு குவஹாத்தியில் இன்று (10.01.2024) நிறைவடைந்தது.
அசாம் அரசுடன் இணைந்து மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறை (டிஏஆர்பிஜி) ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் பிராந்திய மாநாட்டில், ஐந்து அமர்வுகள் இடம் பெற்றன.
மாநாட்டின் இரண்டாம் நாளில் நடைபெற்ற நிறைவு அமர்வில், நிர்வாக சீர்திருத்தத் துறை இணைச் செயலாளர் திரு புனீத் யாதவ், தேசிய மின் ஆளுகை சேவை வழங்கல் மதிப்பீடு (என்.இ.எஸ்.டி.ஏ) தொடங்கப்பட்டதிலிருந்து ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார்.
இரண்டாவது நாளில் வடகிழக்கு மாநிலங்களில் மின்-அலுவலகங்கள் மற்றும் மின் ஆளுகையில் மாவட்ட அளவிலான முன்முயற்சிகள் என்ற அமர்வுகளும் இடம் பெற்றன.
அசாம் அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பயிற்சித் துறை ஆணையர் மற்றும் செயலாளர் திரு சாந்தனு பி கோட்மரே வடகிழக்கு மாநிலங்களின் மின்-அலுவலகங்கள் குறித்த அமர்வுக்குத் தலைமை வகித்தார்.
மின் ஆளுகையில் மாவட்ட அளவிலான முன்முயற்சிகள் குறித்த அமர்வுக்கு அசாம் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அவினாஷ் ஜோஷி தலைமை வகித்தார்.
தேசிய மற்றும் மாநில அளவிலான பொது நிர்வாக அமைப்புகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பது, பொது நிர்வாகத்தில் புதுமைகளைப் புகுத்தி அவற்றைப் பகிர்ந்து கொள்வது, நல்லாட்சி, மின் ஆளுகை போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பிராந்திய மாநாடு நடத்தப்பட்டது
---
(Release ID: 1994821)
ANU/SMB/PLM/KPG/KRS
(Release ID: 1994918)