மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் திரு சர்பானந்தா சோனோவால், ஜனவரி 8-ம் தேதி ஒடிசாவின் பாரதீப்பில் பாரதீப் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர்
Posted On:
07 JAN 2024 5:57PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் ஆகியோர் இணைந்து, 2024 ஜனவரி 8-ம் தேதி ஒடிசாவின் பாரதீப்பில் பாரதீப் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்துடன் இணைந்து பிரதமரின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் (மத்ஸ்ய சம்பதா யோஜனா - பி.எம்.எம்.எஸ்.ஒய்) கீழ் 100 சதவீத மத்திய நிதியுதவியுடன் ரூ.108.91 கோடி மதிப்பீட்டில் பாரதீப் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத் திட்டம் பாரதீப் துறைமுக ஆணையத்தால் 18 மாத காலத்தில் செயல்படுத்தி முடிக்கப்படும்.
சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரதீப் மீன்பிடித் துறைமுகம் ஒடிசாவின் முக்கிய மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றாகும். இது ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து உயரத்தில் மகாநதி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது.
பாரதீப் மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் திட்டம் அதன் சூழலை மேம்படுத்துவதோடு, தற்போதுள்ள வசதிகளையும் நவீனப்படுத்தும். இதன் மூலம், புதிய, திறன் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். மீன்பிடி நடைமுறைகளை இயந்திரமயமாக்குவதன் மூலமாகவும், சிறந்த மேலாண்மை நடைமுறைகளின் மூலமாகவும் இந்த மீன்பிடித் துறைமுகம் சிறப்பாக மாறும். மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்குவதன் மூலம், துறைமுகத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படும். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நவீனமயமாக்கல் மற்றும் மதிப்பு கூட்டல் நடவடிக்கைகள் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இத் திட்டத்தின் கீழ், புதிய ஏலக்கூடம், புதிய வணிக வளாகம், தடுப்புச்சுவர் விரிவாக்கம், கடற்கரை பாதுகாப்புப் பணிகள், மீன்களை பேக்கிங் செய்யும் கூடம், முதலுதவி மையம், சுற்றுச்சுவர் அமைத்தல், மின்சார மேம்பாட்டுப் பணிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சூரிய மின்சக்தி நிலையம், உள்ளிட்ட பல வசதிகள் உருவாக்கப்படும்.
ஒடிசா அரசின் மீன்வளம் மற்றும் கால்நடை மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரணேந்திர பிரதாப் ஸ்வைன், ஜகத்சிங்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராஜஸ்ரீ மல்லிக், பாரதீப் சட்டப்பேரவை உறுப்பினர் திரு சம்பித் ரௌத்ரே ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
----
ANU/AD/PLM/DL
(Release ID: 1993999)
Visitor Counter : 85