பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2023-ஆம் ஆண்டில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையின் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகள் குறித்த ஒரு பார்வை

Posted On: 29 DEC 2023 4:25PM by PIB Chennai

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத் துறை, 2023 பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் ஒரு சிந்தனை முகாமில் ஏற்பாடு செய்தது. பல்வேறு கலந்துரையாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. முதல் நாள் யோகா மற்றும் தியானம் குறித்த அமர்வுகள் நடைபெற்றன. இது பல்வேறு துறை தலைப்புகளில் சிந்தனை விவாதங்களுக்கு வழிவகுத்தது.

பிப்ரவரி 18, 2023 அன்று, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டி.ஓ.பி.டி), நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைகள் துறை (டி.ஏ.ஆர்.பி.ஜி) மற்றும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை (டி.ஓ.பி.பி.டபிள்யூ) ஆகியவற்றின் ஊழியர்களுடன்  நடைபெற்ற  கலந்துரையாடல் அமர்வில்  பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் ஓய்வூதியதாரர்களுடன் அரசை  நெருக்கமாக கொண்டு வருவதில் கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

'சங்கல்ப்' என்ற முன்முயற்சியின் கீழ், ஓய்வூதியம் மற்றும்  ஓய்வூதியதாரர் நலத் துறை, ஓய்வு பெறவிருக்கும் அதிகாரிகளுக்கு, ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை பட்டறைகளை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் ஓய்வுபெறும் ஊழியர்களின் நலனுக்காக நடத்தப்படும் இந்தப் பயிலரங்கம், ஓய்வூதியதாரர்களின் 'எளிமையான வாழ்க்கை' திசையில் ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். இந்த பயிலரங்கில், விரைவில் ஓய்வு பெறவுள்ள ஊழியர்களுக்கு, ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதிய ஒப்புதல் செயல்முறை தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை, 2023-ஆம் ஆண்டில் 3  ஆலோசனை பயிலரங்கங்களை ஏற்பாடு செய்தது. இதுவரை மொத்தம் 52  பயிலரங்கங்கள் நடத்தப்பட்டு 8922 அலுவலர்கள் பயனடைந்துள்ளனர்.

பிரதமரின் உத்தரவின் பேரில், ஓய்வூதியம் மற்றும்  ஓய்வூதியதாரர்  நலத் துறை, அரசுடன் பணிபுரியும் போது ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 2015 மார்ச் மாதம் 'அனுபவ்' என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. அனுபவ் விருதுகள் திட்டம், 2023 இன் கீழ், அனுபவ் விருதுகளுக்கு மேலதிகமாக, ஓய்வுபெறும் / ஓய்வு பெற்ற ஊழியர்களின் பரந்த விளம்பரம் மற்றும் மேம்பட்ட பங்கேற்பை உறுதி செய்வதற்காக முதல் முறையாக 'ஜூரி சான்றிதழ்களையும்' வழங்க முடிவு செய்யப்பட்டது. 23.10.2023 அன்று நடைபெற்ற விழாவில், 04 அனுபவ் விருதுகள் மற்றும் 09 ஜூரி சான்றிதழ்களை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்.

அனுபவ் விருது பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முக்கிய நபர்களைக் கொண்ட மாதாந்திர இணையதள கருத்தரங்கு தொடர், ஓய்வு பெறும் ஊழியர்களை ஊக்குவிக்கவும், அரசில் பணிபுரியும் போது அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் நடத்தப்பட்டது. இந்தத் தொடர்  நிகழ்வு, 13 கருத்தரங்குகளை  நிறைவு செய்தது.

​2023 நவம்பர் 1 முதல் 30 வரை தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (டி.எல்.சி) பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டம் நடைபெற்றது. ஓய்வூதியம் வழங்கும் 16 வங்கிகள், அமைச்சகங்கள்/ துறைகள், 44 ஓய்வூதியர் நலச் சங்கங்கள், யு.ஐ.டி.ஏ.ஐ, எம்.இ.ஐ.டி.ஒய், பி.ஐ.பி மற்றும் டிடி நியூஸ் ஆகியவற்றுடன் இணைந்து நாடு முழுவதும் 105 நகரங்களில் 602 இடங்களில்  இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நவம்பரில், 1.15 கோடிக்கும் அதிகமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 2021 இல் தொடங்கப்பட்ட  இத்திட்டம், ஓய்வூதியதாரர்கள் ஆண்ட்ராய்டு  திறன்பேசிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.

நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் 19.18 லட்சத்துக்கும் அதிகமான முக அங்கீகார  தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 ஐக் கண்காணிப்பதற்காக ஒரு தேசிய டி.எல்.சி  வலைப்பக்கம் தொடங்கப்பட்டது. அனைத்து துறைகள், வங்கிகள் மற்றும் பொதுப்பணித் துறைகளின் 290  முதன்மை அதிகாரிகள் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

70 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்களில், 38 லட்சத்திற்கும் அதிகமானோர் முக அங்கீகாரத்துடன் கூடிய டி.எல்.சி.க்களைச் சமர்ப்பித்துள்ளனர். மார்ச் 2024 க்குள் மொத்த சமர்ப்பிப்பு 50 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சாரங்கள் அரசின் முன்முயற்சிகள் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கும், அரசையும் ஓய்வூதியதாரர்களையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க வழிமுறையாக செயல்படுகின்றன.

***

PKV/BR/AG/KV



(Release ID: 1992062) Visitor Counter : 246


Read this release in: English , Urdu , Hindi , Malayalam