கூட்டுறவு அமைச்சகம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுலம் பல்கலைக்கழகம் பிரதிஸ்தானம் (எஸ்ஜிவிபி) ஏற்பாடு செய்திருந்த பூஜ்ய பூரணி சுவாமி ஸ்மிருதி மஹோத்சவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதுடன் உலகத்தால் பாராட்டப்படுகிறது: திரு அமித் ஷா

புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் இந்திய குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவார்கள்: திரு அமித் ஷா

Posted On: 30 DEC 2023 10:09PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இன்று (30-12-2023) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுல பல்கலைக்கழகம் பிரதிஸ்தானம் (எஸ்ஜிவிபி) ஏற்பாடு செய்திருந்த பூஜ்ய பூரணி சுவாமி ஸ்மிருதி மஹோத்சவத்தில் உரையாற்றினார்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆளுமை மேம்பாடு சிறப்பாக இல்லாவிட்டால், நம் தேசத்தை நம்மால் கட்டமைக்க முடியாது என்றும், குருகுலக் கல்வி முறை ஆளுமை வளர்ச்சியின் பாரம்பரியத்தை நன்கு உள்வாங்கியுள்ளது என்றும் கூறினார். இந்த ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுல பல்கலைக்கழகம் பிரதிஸ்தானத்திற்கு வரும் ஒரு குழந்தை, தேசபக்தராகவும், நன்கு கற்றறிந்த குடிமகனாகவும் சமூகத்திற்குத் திரும்புகிறது என்று அவர் கூறினார்.

 

இந்திய கலாச்சாரம், சனாதன கலாச்சாரம் மற்றும் பக்தியின் அனைத்து மதிப்புகளும் இங்குள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். இந்த குருகுலம் குஜராத்துக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் பல நல்ல மற்றும் வெற்றிகரமான குடிமக்களை வழங்கியுள்ளது என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார். போதைப் பொருள் இல்லாத வாழ்க்கை, இறை வழிபாடு, நல்ல மனப்பான்மை, வாழ்க்கையில் சோம்பேறித்தனத்தை அனுமதிக்காமல் இருப்பது, பசு சேவை முதல் விவசாயம் வரை நிலத்துடன் இணைந்திருப்பது போன்ற விழுமியங்களுடன் சமஸ்கிருதம், சாஸ்திரம், இசை, விளையாட்டு உள்ளிட்ட முழுமையான கல்விக்கான சூழல் இங்கு சிறப்பாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

சுவாமிநாராயண் அமைப்பின் பல்வேறு நிறுவனங்களின் குருகுலங்கள் குஜராத்தில் செயல்படாமல் இருந்திருந்தால், மாநிலத்தில் கல்வி பின்தங்கி இருந்திருக்கும் என்று அவர் கூறினார். அணுக முடியாத பழங்குடிப் பகுதிகளில் மதமாற்றத்தைத் தடுக்க சுவாமிநாராயண் அமைப்பு குருகுலங்களைத் தொடங்கியதாகவும், அவற்றின் மூலம் பழங்குடியின குழந்தைகளை சனாதன தர்மத்துடன் இணைத்ததாகவும் அவர் கூறினார். அவர்களுக்கு கல்வியை வழங்கி, வாழ்க்கையில் உயரங்களை அடைய அவர்களுக்கு இந்த அமைப்பு தைரியத்தை அளித்ததாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார். எஸ்.ஜி.வி.பி குருகுலம் என்பது தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் நவீன கல்வி ஆகியவற்றின் கலவையாகும் என்று அவர் கூறினார்.

 

இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா அனைத்து துறைகளிலும் உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது என்று திரு அமித் ஷா தெரிவித்தார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா பலவீனமான நிலையில் இருந்ததாக்க் கூறினார். அதே நேரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2014-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா உலகின் முதல் நாடாக மாற வேண்டும் என்ற உறுதியுடன் முன்னேறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

 

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், 2047-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், உலகின் அனைத்து துறைகளிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்றும் கூறினார். 2014 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் 11 வது பெரிய பொருளாதாரமாக இருந்தது என்றும் இன்று அது 5 வது இடத்தில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

 

புதிய கல்விக் கொள்கை நமது பண்டைய கல்வி பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது நவீனத்துவத்தையும் பழங்கால இந்தியக் கல்வி முறையையும் இணைப்பாக கொண்டுள்ளது எனவும் இதை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவார்கள் என்று திரு அமித் ஷா கூறினார்.

                                                                                             

Release ID: 1991765

*** 

PKV/PLM/KRS



(Release ID: 1991853) Visitor Counter : 86


Read this release in: English , Urdu , Telugu