ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (என்.எஃப்.டி.பி) ஏற்பாடு செய்த 10வது நிர்வாகக்குழுக் கூட்டம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் நடைபெற்றது. ஆந்திர மாநில மீன்வளத்துறை அமைச்சர் டாக்டர் சீதிரி அப்பலராஜு, கர்நாடக அரசின் மீன்வளம் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு மங்கல் எஸ்.வைத்யா மற்றும் திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அப்போது பேசிய அமைச்சர், தேசிய அளவிலான சிறந்த அமைப்புகளில் ஒன்றாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் இருப்பதாகத் தெரிவித்தார். அதன் பங்களிப்பு, செயல்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். இக்காலகட்டத்தில் மீன்வளத் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான அரசின் முன்முயற்சிகள், கொள்கைகளைப் பரப்புவதிலும் செயல்படுத்துவதிலும் மீன்வள அமைச்சகத்தின் ஒரு பகுதியாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஓரிடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் கூறினார்.
ஏற்றுமதி சந்தையில் அதிக தேவையைக் கொண்ட இறால் வளர்ப்பைப் போலவே மீன் இறைச்சி உற்பத்தியின் முக்கியத்துவத்தையும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். மீன் உணவு, ஆழ்கடல் மீன்பிடிப்பு, படகுகள், பாரம்பரிய பதப்படுத்தும் அலகுகள், விதைத் தேவை போன்றவற்றுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான கொள்கைகளை நடுநிலை முறையில் மேற்கொள்ள வேண்டும். தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மீன்வளத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் உள்கட்டமைப்பை அந்தந்த மாநிலங்கள் விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில், சிறந்த உள்நாட்டு சந்தைப்படுத்தலுக்காக மீன் சந்தையை நிறுவுவதற்கு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்ப உதவி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் துறைமுக பொறுப்புக் கழக அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் கீழ் ரூ.151.81 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 13 நியமன அலுவல் சாரா உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மற்ற அலுவல் சாரா உறுப்பினர்கள் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் துறையின் குறிப்பாக மீனவ சமூகத்தின் வளர்ச்சியின் அவசியத்தை தெளிவுபடுத்தியுள்ளனர்.
***
ANU/SM/IR/AG/KRS